கண்டி- ஹந்தானையில் தனியார் தலைமைத்துவ வகுப்பு என்ற தோரணையில் பாடசாலை மாணவிகளை பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் கைதாகியுள்ள நான்குசந்தேக நபர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல உத்தரவிட்டார். 

மேற்படி தலைமைத்துவ வகுப்பு நடந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர் மற்றும் அவர்களை நிர்வகித்த இரண்டு பெண்கள் மற்றும் கண்டியைச் சேர்ந்த பிரபல வாத்தகர் ஒருவரும் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

மேற்படி வர்த்தகப் பிரமுகர் நீதிமன்றில் சுகவீனமுற்று மூச்சுத்திணறி விழுந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கும்படி சட்டத்தரணி முன்வைத்த வேண்டுகோளை நீதிவான் ஏற்றுக் கொள்ளவில்லை.

மேலதிக சிகிச்சை தேவையாயின் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் நீதிவான் அறிவுறுத்தினார். 

இதேவேளை, சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கக்கூடாது என்றும் சட்டத்தரணிகள் எவரும் நீதிமன்றில் சந்தேக நபர்கள் சார்பாக ஆஜராகக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்து பாதிக்கப்பட்ட மாணிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நீதி மன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.