அனுஷா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும் இந்த காலகட்டத்தில் வறண்ட விழித்திரை மற்றும் கண்புரையால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்திருப்பதாக கண் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டில் கொரோனாத் தொற்று பாதிப்பு தீவிரமாக இருந்த காலகட்டத்தில் பல மாதங்கள் மக்கள் இல்லங்களிலேயே முடங்கி இருந்தனர். அவர்களுக்கு கணினி, கைபேசி, தொலைகாட்சி போன்ற இலத்திரனியல் சாதனங்களின் பயன்பாடு தான் உற்ற துணையாக இருந்தன. 

இந்த காலகட்டத்தில் மக்கள் வழக்கமான அளவைவிட கூடுதலாக இலத்திரனியல் சாதனங்களை பாவித்ததால் அவர்களுக்கு வறண்ட விழித்திரை மற்றும் கண்புரை பாதிப்புகள் அதிகரித்தன.

இது தொடர்பாக நடைபெற்ற அண்மைய ஆய்வில் உலகளவில் 15 சதவீதத்தினர் கூடுதலாக பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது. வறண்ட விழி பாதிப்பை சரியான தருணத்தில் கண்டறிந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளாவிட்டால் நாளடைவில் பாரதூரமான பக்க விளைவுகள் ஏற்படும் என மருத்துவர்கள் விவரிக்கிறார்கள்.

எம்முடைய கண்களில் உள்ள சுரப்பிகளிலிருந்து போதிய அளவிற்கு நீர் சுரக்க வேண்டும் இல்லையெனில் உலர் விழி பாதிப்பு ஏற்படும். புறச்சூழலில் ஏற்படும் மாசு, வெப்பநிலை மாற்றம், இரசாயனம் கலக்கப்பட்ட காற்று போன்ற காரணிகளால் விழிகளில் இயல்பாக சுரக்க வேண்டிய நீர் சுரப்பியின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது.

இவர்களுக்கு கண் எரிச்சல், கண் கூச்சம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இவற்றை தொடக்க நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் நாளடைவில் பார்வைத்திறன் குறைபாடு ஏற்படக்கூடும்.

அதனால் ஆண்டுதோறும் கண்பார்வை பரிசோதனையை தவறாமல் செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்டாயமாக கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.

  

டொக்டர் அமர் அகர்வால்