எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைமையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளதாக மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் நான்காம் ஆண்டு தொடக்க விழா சென்னை புறநகர் பகுதியில் உள்ள கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் தலைவர் கமல்ஹாசன்,'  ரஜினியை சந்தித்த போது அரசியல் ஏதும் பேசவில்லை. ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டோம். நண்பர் ரஜினி அரசியலை இன்னும் கவனித்துக் கொண்டிருக்கிறார்.

கவனிக்க வேண்டியது எல்லோருடைய கடமையும் கூட. அவரும் கவனிக்கவேண்டும். கவனிக்காமல் விட்டதால் தான் இந்த அவலத்துக்கு ஆளாகி கொண்டிருக்கிறோம். அரசியலுக்குள் வராமல் இருந்த 40 ஆண்டுகளாக கூட நான் அரசியலை கவனித்துக் கொண்டுதான் இருந்தேன்.

கூட்டணியில் இணைவதற்கு எம்மிடம் யாரும் நேரடியாக அழைப்பு விடுக்கவில்லை. மக்கள் நீதி மய்யத்தில் நல்லவர்கள் இணைய வேண்டும். மக்கள் நீதி மய்யம் தலைமையில் மூன்றாவது அணி அமைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே தோன்றுகிறது. அதற்கான மேகங்கள் கூடி வருவது தெரிகிறது. விரைவில் மழை பெய்யும்.' என்றார்.

புதுவையில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சியை கவிழ்த்ததன் மூலம் பா.ஜ.க, தி.மு.க விற்கும் மறைமுகமான நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுவை கூட்டணி அரசில் உள்ள தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனையும் இராஜினாமா செய்ய வைத்ததன் மூலம் பாரதிய ஜனதா கட்சி தி.மு.க விற்கும் செக் வைத்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் அவதானிக்கிறார்கள்.

தி.மு.க வின் கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்ற வேண்டும் என்பது தான் பா.ஜ.க வின் முக்கிய நிபந்தனையாக இருக்கிறது.

இதன் காரணத்தினால் வரும் நாட்களில் தி.மு.க கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேற்றப்படும் அல்லது அவமானப்படுத்தப்பட்டு வெளியேறும் சூழல் உருவாகும் என்றும், இதன் காரணமாகவே மக்கள் நீதி மய்யம் தலைமையில் மூன்றாவது அணி அமைவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.