(எம்.மனோசித்ரா)

இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் மன்றம்
உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கான பொருத்தமான நடவடிக்கையை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் மன்றம், தற்போது நியமிக்கப்பட்டுள்ள 6 அமைச்சர்களடங்கிய குழுவின் செயற்பாடுகளில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் மன்றத்தின் தலைவர் ஆயர் வின்ஸ்டன் ஜே.பெர்னாண்டோ பதுளையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆரம்பத்தில் முறையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பாராளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாகவும் அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஊடாகவும் இவை முன்னெடுக்கப்பட்டன. சுமார் 214 நாட்கள் சந்தேகநபர்கள், சாட்சியாளர்கள் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.

தற்போது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இந்த அறிக்கையை சமர்பிப்பதன் மூலம் வாத பிரதிவாதங்களை நடத்தக் கூடியதாக இருக்கும். அதனையடுத்து சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்ட பின்னர் அவரால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இறுதியாக அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுவதன் ஊடாக கத்தோலிக்க மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்று நாம் எதிர்பார்த்திருந்தோம்.

ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. தற்போது நியமிக்கப்பட்டுள்ள குழு தொடர்பில்  எமக்கு பாரிய சந்தேகம் எழுந்துள்ளது. பொறுப்புடனும் ஒழுக்கத்துடன் இது தொடர்பான நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட வேண்டும். எனவே குறித்த அறிக்கை பேராயரிடமும் கையளிக்கப்பட வேண்டும்.

பொருத்தமான நடவடிக்கையை துரிதமாக எடுக்குமாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.