சிவலிங்கம் சிவகுமாரன்

”இலங்கை அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தின் 12 ஆம் உறுப்புரையில் 12 (2) பிரிவின் படி பிரஜைகள் எவரும் பாலின அடிப்படையில் பாகுபாடு காட்ட முடியாது எனக் கூறப்பட்டுள்ளது. அதேவேளை இலங்கையின் காலனித்துவ கால சட்டங்கள் இன்னும் அமுலில் உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப அவை மறுசீரமைக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தாலும் எந்த அரசாங்கங்களினாலும் அவை ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை”

உலகின் முதல் பெண் பிரதமரை கொண்ட நாடு என்ற பெருமையைப்பெற்ற இலங்கை, அதன் பின்னர் ஜனாதிபதியாகவும், பிரதம நீதியரசராகவும்கூட பெண்களை ஏற்றுக்கொண்டது. 

நாட்டின் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் பெண்கள். அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் ஆடை தொழிற்றுறை, மத்திய கிழக்கில் பணிப்பெண்களாக இருப்போரின் வருமானம் மற்றும் தேயிலைத்தொழிற்றுறை ஆகிய மூன்று பிரதான துறைகளில் இருப்பவர்களும் பெண்களே. 

அரசியல்,கல்வி, தொழிற்றுறை, வணிகம், நிர்வாகப் பொறுப்புகளில் பிரகாசிக்கும் பெண்கள் கொண்ட பெருமைமிகு நாடு எமது இலங்கை. 

எனினும் இலங்கையின் முதல் பெண் பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட பிம்ஷானி ஜாசின் ஆராச்சியின் விவகாரத்தைப் பார்க்கும் போது இது தொழிற்றுறையுடன் இணைந்த சீர்திருத்தங்களுக்குட்படாத பழமையான சட்டங்கள் பற்றிய விவாதமா அல்லது பெண்கள் இவ்வாறான உயர்பதவிகளிலிருப்பதை விரும்பாத ஆணாதிக்கவாத சிந்தனையின் வெளிப்பாடா என்ற இருவேறு கோணங்களில் நோக்க வேண்டியுள்ளது. 

மறுபக்கம் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பொலிஸ் கட்டளைச்சட்டங்களில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அழுத்தங்களும் சிவில் சமூகத்தினர் மத்தியில் எழுந்துள்ளன. 

சமூக ஊடகங்களிலும் இது தொடர்பாக காரசாரமான விவாதாங்கள் மேலெழுந்துள்ளன. ஏனென்றால் மேற்படி பிம்ஷானி ஜாசின் ஆராச்சியின் நியமனத்தின் நியாயம் இல்லை என்றும் அவரை பணி நீக்கம் செய்யக்கோரியும் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருப்பவர்கள் பொலிஸ் சேவையில் உள்ள 32 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் ஆவர். 

இதில் முன்னாள் பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான ருவன் குணசேகரவும் அடங்குகிறார். இவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு என்ன?

பிரதி பொலிஸ் மா அதிபர் என்ற பதவி உயர்வானது பிம்ஷானிக்கு பொலிஸ் மா அதிபர் மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடனேயே வழங்கப்பட்டது. 

எனினும் “பெண்” என்ற சொல்லை மாத்திரம் கருத்திற்கொண்டு பொலிஸ் நியமனங்களை வழங்கும் ஒழுங்குமுறை இல்லை என்ற காரணத்தினால் அவருக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் என்ற நியமனத்தை வழங்க முடியாது என்றும் இது சட்டவிரோதமான பதவி உயர்வு என்பதே மனுதாரர்களின் பிரதான வாதமாகும்.

அதாவது பொலிஸ் பதவி உயர்வு குறித்த சுற்று நிருபங்களில், 'பெண்' என்ற பதம் பயன்படுத்தப்படாமை காரணமாக, பெண்கள் எவருக்கும் பிரதிப் பொலிஸ்மா அதிபராக முடியாது என மனுதாரர்கள் மனுவூடாக சுட்டிக்காட்டியுள்ளனர்.  

அவ்வாறான பின்னணியில் வழங்கப்பட்டுள்ள இந்த பதவி உயர்வு ஊடாக,  அரசியல் அமைப்பினால்  உறுதி செய்யப்பட்டுள்ள தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்களான 32 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்களும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு விசாரணை கடந்த 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மனுதாரர்கள் கோரும் இடைக்கால தடை உத்தரவுக்கு எதிரான குறித்த ஆட்சேபங்களை எதிர்வரும் 3 வார காலத்துக்குள் எழுத்து மூலம் முன்வைக்குமாறு பிரதிவாதிகள் தரப்புக்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், தொடர்ந்து மனுவினை எதிர்வரும் மே 18 ஆம் திகதி பரிசீலிப்பதாக அறிவித்துள்ளது.

இலங்கை பொலிஸ் சேவை

இலங்கை பொலிஸ் சேவையானது 2016 ஆம் ஆண்டில் 150 வருடங்களை நிறைவு செய்தது. பிரித்தானிய காலனித்துவ ஆட்சி காலத்தில் நாட்டின் அதிகாரங்களையும் பொறுப்புக்களையும் நிர்ணயிப்பதற்காக 1865 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பொலிஸ் கட்டளைச்சட்டம் உருவாக்கப்பட்டது. இக்கட்டளைச்சட்டமானது ‘இலங்கையில் ஒரு பொலிஸ் படையை உருவாக்குவதற்கும் ஓழுங்குபடுத்துவதற்குமான கட்டளை” என்றே அழைக்கப்பட்டது.

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் ரத்னகிரி மாவட்ட பொலிஸ் தலைமை அதிகாரியாக விளங்கிய வில்லியம் ரொபர்ட் கெம்பல் என்பவரை அப்போதைய ஆளுநர் பிரட்ரிக் நோத்,1866 ஆம் ஆண்டு செப்டெம்பர் 3 ஆம் திகதி, இலங்கை பொலிஸ் படையின் பிரதம பொலிஸ் அத்தியட்சகராக நியமித்தார். அந்த தினமே இலங்கை பொலிஸ் சேவையின் ஆரம்ப நாளாக விளங்குகின்றது. 

இந்த ஆண்டு உருவாக்கப்பட்ட பொலிஸ் கட்டளைச்சட்டமானது இலங்கை சுதந்திரம் அடையும் வரையான காலகட்டம் வரை பல திருத்தங்களுக்குட்பட்டுள்ளது. 

இறுதியாக 1984 ஆம் ஆண்டு 41 ஆம் இலக்க பொலிஸ் சட்டம் திருத்தப்பட்டது. அதிலிருந்து சுமார் மூன்றரை தசாப்த காலத்துக்கு மேல் இச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லையென்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

ஆகவே பொலிஸ் பதவிகளில் உயர் நியமனங்கள் என்பது குறித்தான விதிமுறைகள் மற்றும் பின்பற்றப்படவேண்டிய நடைமுறை சட்டங்களில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுவதில் நியாயங்கள் உள்ளன.

சவால்களுக்கு மத்தியில் நிலைத்து நின்ற பிம்ஷானி

இலங்கை பொலிஸ் சேவையில் 1997 ஆம் ஆண்டு இணைந்து கொண்டவர் பிம்ஷானி. 

அம்பாந்தோட்டை வீரகெட்டிய பகுதி கிராமத்தை பிறப்பிடமாகக்கொண்டவர். றுஹுணு பல்கலைக்கழகம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரியாவார். 

யுத்த காலகட்டத்தில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய அவர் புலனாய்வுப்பிரிவில் 14 வருடங்கள் பணிபுரிந்தவர். 

சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப்பிரிவின் பொறுப்பதிகாரியாகவும் இருந்தவர். கிழக்கு திமோர், தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் பணியாற்றியவர் மட்டுமன்றி ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பிரிவிலும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமிக்கவர்.

பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு சிரேஷ்ட தரம் கொண்ட நியமனங்கள் கிடைக்கபெற வேண்டும் என்ற இவரது போராட்டம் நீண்டது. 

புள்ளி விபரங்களின் படி 85 ஆயிரம் பேர் கொண்ட இலங்கை பொலிஸ் சேவையில் 8,900 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமை புரிகின்றனர். 2000 ஆம் ஆண்டு தனது முதுமாணி பட்டத்தைப் பெற்றுக்கொண்ட பிம்ஷானி உதவி பொலிஸ் அத்தியட்சகர் திறந்த பரீட்சையில் தேர்ச்சி பெற்றும் அவருக்கு அப்பதவி வழங்கப்படவில்லை. 

சட்டரீதியான போராட்டங்களுக்குப்பின்னரே அவருக்கு 2007 ஆம் ஆண்டு பதவி வழங்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு பொலிஸ் அத்தியட்சகராகவும் 2017 இல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராகவும் பதவி உயர்வு பெற்றார். 

பொலிஸ் சேவையில் உள்ள சிரேஷ்ட பெண் பொலிஸ் அதிகாரிகள் பதவி உயர்த்தப்படவேண்டும் என்ற இவரது போராட்டமே 2019 ஆம் ஆண்டு, 8 பெண் பொலிஸ் அதிகாரிகள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வு பெற காரணமாயிற்று.

தற்போது இவ்வாறான சிரேஷ்ட பதவிகளில் 10 பெண் பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமே இலங்கையில் உள்ளனர். இது இந்த தரத்திலுள்ள மொத்த பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் 0.01 சதவீதம் என்பது முக்கிய விடயம். 

என்னதான் சட்டம் மற்றும் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய பொறுப்பிலிருந்தாலும் தமது துறைக்குள்ளும் ஆண்/பெண் என்ற பிரிவினைகள் தொழில் ரீதியாக உள்ளதை பிம்ஷானி அறிந்து அதை கண்டு பின்வாங்கவில்லை.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதல் பெண் பிரதி பொலிஸ் மா அதிபராக இவர் நியமிக்கப்பட்டவுடன் இலங்கை பொலிஸ் சேவை வரலாற்றை மாற்றிய பெண் என இவருக்கு ஊடகங்கள் புகழாரம் சூட்டின. 

ஆனால் அடுத்த மாதமே இவரது பதவி உயர்வு அடிப்படை மனித உரிமை மீறல் என மனு தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இலங்கை அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தின் 12 ஆம் உறுப்புரையில் 12 (2) பிரிவின் படி பிரஜைகள் எவரும் பாலின அடிப்படையில் பாகுபாடு காட்ட முடியாது எனக் கூறப்பட்டுள்ளது. 

அதேவேளை, இலங்கையின் காலனித்துவ கால சட்டங்கள் இன்னும் அமுலில் உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப அவை மறுசீரமைக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தாலும் எந்த அரசாங்கங்களினாலும் அவை ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. 

இந்தியாவின் பொலிஸ் சட்டங்களில், பொலிஸ் பதவி உயர்வு தொடர்பான சரத்துக்கள் ஆண்/பெண் இருபாலாரையும் தாண்டி மூன்றாம் பாலினத்தவருக்கும் (திருநங்கைகள்) சமமாக பயன்படுகின்றன. 

ஆரம்ப காலத்தில் ஆண்கள் என்று மட்டும் பாவிக்கப்பட்டு வந்த சொல் நாளைடைவில் பல துறைகளில் ஆண்/பெண் என மாற்றப்பட்டு இப்போது பாலினம் குறிப்பிடப்படாமல் “நபர்”என்றே உபயோகிக்கப்படுகின்றது. 

அரசியலமைப்பை விட ஒரு நாட்டில் வலிமையானது எதுவுமில்லை. அதன் அடிப்படையில் பிரதி பொலிஸ் மா அதிபர் பிம்ஷானிக்கு நியாயம் கிடைக்கும் பட்சத்தில் இந்தநாட்டின் சகல அரச சேவைகளிலும், திறமையிருந்தும் அடக்குமுறைக்குட்பட்டிருக்கும் பெண்களுக்கு விமோசனம் கிட்டும் என்று கூறலாம்.