இஸ்ரேலின் கடற்பரப்பில் ஒரு எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட கசிவு, பல ஆண்டுகாலப் பகுதியில் இஸ்ரேலின் மிகப்பெரிய கடல்சார் சுற்றுச்சூழல் பேரழிவிற்கு வழிவகுத்ததுள்ளதுடன், அதிகாரிகள் நாட்டின் கடற்கரைகளை மூடி, ஒரு பெரிய தூய்மைப்படுத்தும் முயற்சியையும் ஆரம்பிக்க வைத்துள்ளது.

இஸ்ரேலின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் லெபனானுடனான நாட்டின் வடக்கு எல்லையிலிருந்து கடற்கரைகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு மக்களை ஞாயிற்றுக்கிழமை எச்சரித்துள்ளது.

இஸ்ரேலிய இலாப நோக்கற்ற குழுவான ஈக்கோ, ஓசியனைச் சேர்ந்த 4,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இதுவரை கடற்கரைகளில் படிந்துள்ள தாரினை அகற்ற உதவியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

என்ன நடந்தது என்று இஸ்ரேலிய மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

அதேநேரத்தில் நாட்டின் பிராந்திய நீர்நிலைகளுக்கு அப்பால், ஒரு கப்பல் மத்தியதரைக் கடலில் பத்து அல்லது நூற்றுக்கணக்கான டன் எண்ணெயை கசியவிட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

குறித்த கடற்பரப்பில் ஒரு வாரத்திற்கு முன்னர் வீசிய புயல் காரணமாக கப்பல் சேதத்துக்குள்ளாகி இவ்வாறு எண்ணெயை கடலில் கசிய விட்டதாகவும் கூறப்படுகிறது.

எனினும் மேற்படி கப்பல் தொடர்பான விபரங்கள் தெளிவாக கண்டறியப்படவில்லை.

இந் நிலையில் இஸ்ரேலிய அதிகாரிகள் ஐரோப்பிய அதிகாரிகளுடன் இணைந்து அந்தப் பகுதி வழியாகச் சென்ற கப்பல்களின் செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்கின்றனர்.

கடலில் கலந்துள்ள தார் மாசு ஏற்கனவே வனவிலங்குகளை பாதித்துள்ளது. எண்ணெய் எச்சத்தில் மூடப்பட்டிருந்த அல்லது எண்ணெயை உட்கொண்ட கடல் பறவைகள், ஆமைகள் மற்றும் மீன்களை மீட்க தொண்டர்கள் விரைந்தனர். 

தாரால் மூடப்பட்ட பல ஆமைகளுக்கு சிகிச்சையளிப்பதாக இஸ்ரேலின் தேசிய கடல் ஆமை மீட்பு மையம் உறுதிப்படுத்தியது.