(அல்அரேபியா தளத்துக்காக ஃபாடியா ஜெஃப்ரி)

பாகிஸ்தானில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் (தன்னார்வு தொண்டு நிறுவனங்கள்) “எதிர்மறையாக நிகழ்ச்சி நிரலை” ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டு நிதியைப் பெற்று வருவதாகவும், அரசுக்கு எதிராக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம் தற்போது நாட்டில் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மாற்றுக்கருத்துக்களை வெளிப்படுத்துவதை தடுக்கும் வகையிலான தடை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

உள்ளுர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் (தன்னார்வு தொண்டு நிறுவனங்கள்) பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் அழுத்தங்களுக்கு உள்ளாகி வருவதாக அவ்வப்போது தகவல்கள் பதிவானாலும் பிரதமர் இம்ரான்கானின் அரசாங்கத்தின் கீழ் அந்த அழுத்தங்களும் நெருக்கடிகளும் மிகத் தீவிரமடைந்துள்ளது. இதனால் தற்போது 18 வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள் நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்தி வெளியேறியுள்ளன. இவ்வாறு வெளியேறும் நடவடிக்கையானது 2018 முதல்  இடம்பெற்று வருகின்றது. 

சிவில் சமூக அமைப்புகளின் மீதான அடக்குமுறையானது பாக்கிஸ்தான் அரச அதிகாரிகளின் பரந்துபட்ட திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்றும் அரச எதிர்ப்பாளர்களை அல்லது மாற்றுக்கருத்துக் கொண்டவர்களை மௌனிப்பதற்கான  செயற்பாடாகவும் இருப்பதாக ஜனநாயகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் உரிமைகள் குழுக்கள், ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

கடந்த மாதம் பாகிஸ்தானின் அமைச்சரவைக் கூட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு நிதி தொடர்பான விடயத்தினை இம்ரான் கான் கையிலெடுத்திருந்தார். இந்தப் பிரச்சினையை இம்ரான் கான் கையிலெடுக்கும் போது அவருடைய அரசாங்கம் பேச்சு சுதந்திரத்தினை நசுக்கின்றது என்று அதிகளவில் கவலைகளும் கரிசனைகளும் வெளியிடப்பட்டிருந்தன. ஆனால் அவர் அவற்றைப் பொருட்படுத்தாது தான் எடுத்த விடயத்தினை கையாள விரும்பியிருந்தார். இச்செயற்பாடும் ஜனநாயக சக்திகளுக்கு மேலும் கவலைகளை தோற்றுவித்திருந்தன. 

“இம்ரான் கானின் அரசாங்கம் பல சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தடைசெய்தது மற்றும் உள்ளுர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்தமையானது மிகவும் ஆபத்தான விடயமாகும். இந்த சூழ்நிலையை நாங்கள் இதற்கு முன்பு அனுபவித்ததில்லை. அரசாங்கம் ஊடகங்களைக் கட்டுப்படுத்த விரும்புகிறது. அரச சார்பற்ற அமைப்புக்களை கட்டப்படுத்த விரும்புகின்றது. இவை மிகவும் பாரதூரமான சிந்தனையில் வெளிப்பாடாகும்”என பாகிஸ்தான் தெற்காசியா கூட்டு அமைப்பின் நிர்வாக இயக்குநர் மொஹமட் தஹ்ஸீன் கூறினார்.

அத்துடன் “தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்பாக கான் தலைமையிலான அரசாங்கத்தை கண்டிப்பதாகவும் குடிமக்களின் நலனுக்காக உழைப்பதை விட தன்னார்வ தொண்டு நிறுவனங்களை குறிவைப்பது அரசாங்கத்திற்கு எளிதானது” என்றும் மொஹமட் தஹ்ஸீன் குறிப்பிடுகின்றார்.

“தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நாட்டிற்கு எதிராக செயல்படுகின்றன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பாக்கிஸ்தானில் மனித வளர்ச்சி, அடிப்படை உரிமைகள் மற்றும் சமூக நீதியை மேம்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்களில்  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்; மிக முக்கியமான பங்கை வகித்து வருகின்றன” என்றும் மொஹமட் தஹ்ஸீன் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதற்கிடையில், வாஷிங்டனை தளமாகக் கொண்ட வூட்ரோ வில்சன் அறிஞர்களுக்கான மையத்தின் தெற்காசியா நிபுணர் மைக்கல் குகல்மேன், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் “அடிப்படையில் உளவுத்துறை நடவடிக்கைகளுக்கு ஒரு முன்னணி” என்ற பழைய குற்றச்சாட்டுகளை மறுத்து கருத்துக்களை வெளியிட்டுள்ளார். 

“வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள், குறிப்பாக சி.ஐ.ஏ., போன்றவை நீண்ட காலமாக இவ்விதமான அடையாளத்தை வைத்திருகின்றன. குறித்தவொரு நாட்டில், அரச சார்பற்ற நிறுவனங்கள் அல்லது தன்னார்வுதொண்டு நிறுவனங்களுக்கு எதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் சந்தைப்படுத்தவதற்கு மேற்படி கூற்று இலகுவானதொன்றாகவுள்ளது.  பாக்கிஸ்தானில் ஒழிந்திருந்த ஒசாமா பின்லேடனைக் கண்டுபிடிப்பதற்கு போலி தடுப்பூசி பிரசாரத்தில் ஈடுபட்ட சர்வதேச அமைப்பான சேவ் தி சில்ரன் சி.ஐ.ஏக்கு உதவியதாகவும் அந்த அமைப்பு சி.ஐ.ஏ.யின் நிதி உதவியில் இயங்கியதாகவும் பாக்கிஸ்தானில் உள்ள பலர் நம்புகின்றனர். 

புல்லேடன் மீதான அமெரிக்க படைகளின் தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மீதான பாக்கிஸ்தான் அரசாங்கத்தினதும், அதிகாரிகளினதும் சந்தேகம் அதிகரித்துள்ளதோடு அது தொடாபில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் காரணமாகின்றது” என்று மைக்கல் குகல்மேன் மேலும் விபரிக்கின்றார்.

மேலும், அரசியல் ஆய்வாளர் கமர் சீமா, “மாநில அதிகாரிகளுக்கும் சிவில் சமூகக் குழுக்களுக்கும் இடையிலான நம்பிக்கையின்மை” குறித்து சுட்டிக்காட்டியுள்ளார். “இந்த அமைப்புகள் தேசிய சீர்கேட்டை உருவாக்கக்கூடும் என்று அரசாங்கம் அஞ்சுவதற்குள் அதற்கு முன்னதாகவே நிலைமைகளை . நிர்வகிக்க முடியும் என்று அது வெகுவாக நம்புகின்றது” என்று அவர் குறிப்பிடுகின்றார். 

அத்துடன் “வெளிநாட்டு பணம் எவ்வாறு பாகிஸ்தானுக்குள் நுழைகிறது, அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து அரசாங்கத்திற்கு கவலை உள்ளது. ஆனால் அரசாங்கத்தின் கவலையிலும், கரிசனையிலும் முரண்பாடாடொன்று காணப்படுகின்றது. அது என்னவென்றால், பாக்கிஸ்தானின் பாதுகாப்பு ஸ்தாபனம் நீண்டகாலமாக தனக்கான வெளிநாட்டு உதவியை வரவேற்றுள்ளது. அவ்வாறிருக்கையில் வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிதிப்பயன்பாட்டை மையப்படுத்தி அவர்களை வெளியேற்றுவது கடுமையானது. 

வெளிநாட்டு நிதியுதவி பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடு, சர்வதேச நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பாகிஸ்தானுடன் ஒத்துழைப்புடன் பணிகளில் ஈடுபடுவதைத் தடுக்கிறது. சர்வதேச ஒத்துழைப்பால் பயனடைகின்ற நாட்டின் ஏழைகளுக்கு இது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்”  என்று பல நிபுணர்கள் கூறுகின்றனர்

அத்துடன் “ தொண்டு நிறுவனங்கள் மீதான ஒடுக்குமுறை நாட்டின் பிம்பத்தை கெடுப்பதாகவும்  பாகிஸ்தான் சர்வதேச உதவிகளையும் ஆதரவையும் ஒத்துழைப்புக்களையும் இழக்கும் நிலைமையையே தோற்றுவிக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.