சர்வதேச ரீதியில் கராத்தே ஒரு தற்காப்புக்கலையாகவும் விளையாட்டாகவும் திகழ்ந்தது. அண்மையில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் குழாமின் (IOC )International Olympic Committee  129 ஆவது அமர்வு முடிவு வரலாற்றில் ஒலிம்பிக் திட்டமானது மிக விரிவான பரிணாம வளர்ச்சியை நோக்கி நகர்ந்துள்ளது. 

இதனடிப்படையில் கராத்தே ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்ச்சி திட்டத்தில் இடம்பிடித்துள்ளமை கராத்தே வீரர்களின் அபிலாசையில் ஒரு வரலாற்று பதிவாகும்.

2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சர்வதேச ஒலிம்பிக் குழாம் ஐந்து விளையாட்டுகளை ஒலிம்பிக் போட்டிகளில் இணைத்துக்கொள்ளும் பிரேணையை முன்வைத்தது. 

அதில் கராத்தே விளையாட்டும் உள்ளடக்கப்பட்டிருந்தது. சர்வதேச ஒலிம்பிக் குழாமின் உத்தியோகபூர்வ அறிக்கையின் பிரகாரம் 2020 ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோ வில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக்போட்டிகளில் கராத்தேயும் இணைக்கப்பட்டுள்ளது. 

விளையாட்டு வீரர்களின் ஒலிம்பிக்போட்டிகளின் கனவு நனவாகும் நல்ல தருணம் இதுவாக அமைந்துள்ளது.

கராத்தே கலை ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற உலக நாடுகளின் கராத்தே ஆர்வலர்களை ஒன்றிணைத்து செயற்பட்ட பெருமை உலக கராத்தே சம்மேளனத்தையே World Karate Federation (WKF) சாரும்.

கராத்தே கலையை உலக நாடுகளில் நெறிப்படுத்தி அதனை மேம்படுத்திவரும் பலம் வாய்ந்த அமைப்பாக உலக கராத்தே சம்மேளனம் World karate Federation காணப்படுகின்றது. இது நாடுகளின் விளையாட்டு அமைச்சிற்குட்பட்ட தேசிய கராத்தே சம்மேளனங்களை National karate Federations இணைத்து தனது நிகழ்ச்சி திட்டங்களை நெறிப்படுத்துகின்றது. 

இதனடிப்படையில் இலங்கை கராத்தே தோ சம்மேளனமும் Sri Lanka Karate do Federation –National Body உலக கராத்தே சம்மேளனத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக தனது செயற்பாடுகளை உறுப்புரிமை பெற்ற கராத்தே அமைப்புகள்ரூபவ் கழகங்கள் ஊடாக நெறிப்படுத்தி வருகின்றது.

இலங்கை கராத்தே சம்மேளனம் வருடந்தோறும் நடாத்தி வரும் மாவட்ட, மாகாண மற்றும் தேசிய ரீதியான கராத்தே போட்டிகள் உலக கராத்தே சம்மேளனத்தின் விதிமுறைக்கமைவாகவே இடம்பெறுகின்றமை சிறப்பாகும்.

மேலும் தேசிய கராத்தே மத்தியஸ்தர்கள், நடுவர்களுக்கான பயிற்சிகள் மற்றும் தேர்வுகளும் உலக கராத்தே சம்மேளனத்தின் விதிமுறைகளுக்கமைவாகவே நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒலிம்பிக் போட்டிகளில் கராத்தே அங்கீகாரம் பெற்றமை கராத்தே கலையின் விளையாட்டு பரிணாமத்தின் ஒரு மைல்கலாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.