மெய்நிகர் போர்க்களம்

Published By: Digital Desk 2

21 Feb, 2021 | 05:33 PM
image

கார்வண்ணன்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறல், நீதி, நல்லிணக்கம், போன்றவற்றை முன்னிறுத்தி, இதுவரை கொண்டு வரப்பட்ட தீர்மானங்களைத் தாண்டி ஒரு கடுமையான தீர்மானத்தை முன்வைக்க வேண்டிய நிலைக்கு அனுசரணை நாடுகள் தள்ளப்பட்டிருக்கின்றன. 

ஜெனிவாவில் தோற்றுப் போகும் நிலை ஏற்பட்டாலும், ஐ.நா. பாதுகாப்புச் சபையைத் தாண்டுவதற்கு சீனா தனது வீட்டோவைப் பயன்படுத்தி தடுத்து விடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அரசாங்கத்திடம் இருக்கிறது. ஆனாலும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், நிறைவேற்றப்படும் தீர்மானத்தில், போர்க்குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் இராணுவ அதிகாரிகளின் சொத்துக்களை முடக்கவும், பயணத் தடைகளை விதிக்கவும், வலியுறத்தப்பட்டால், அது இலங்கைக்குப் பெரும் பின்னடைவாகவே இருக்கும்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் நாளை 22ஆம் திகதி ஆரம்பமாகப் போகிறது.

இலங்கையைப் பொறுத்தவரையில் இது ஒரு சவால் நிறைந்த கூட்டத்தொடர்.

போர் முடிவுக்கு வந்து 12 ஆண்டுகளாகப் போகின்ற நிலையில், பொறுப்புக்கூறல், நீதி, நல்லிணக்கம், போன்றவற்றை முன்னிறுத்தி இதுவரை கொண்டு வரப்பட்ட தீர்மானங்களைத் தாண்டி ஒரு கடுமையான தீர்மானத்தை முன்வைக்க வேண்டிய நிலைக்கு அனுசரணை நாடுகள் தள்ளப்பட்டிருக்கின்றன.

ஐ.நா. மனித உரிமைகள் பேரைவையில் 2012ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை விவகாரம் கண்காணிப்புக்குரிய ஒன்றாக மாறியிருந்த போதும், கடந்த 8 ஆண்டுகளில் இந்த விடயங்களில் எந்த முன்னேற்றத்தையும் அளிக்க முடியவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையையோ, ஆறுதலையோ, நீதியையோ வழங்கக் கூடிய வகையில் இதுவரை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் செயற்பட முடியவில்லை.

அதற்கு ஒரு காரணம், ஜெனிவாவில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்கள், இலங்கையைக் கட்டுப்படுத்தக் கூடியவையாக இருப்பதில்லை.

இன்னொரு காரணம், தீர்மானங்களை நிறைவேற்ற மறுத்த போதும், இணங்கிய போதும், இலங்கை அரசு ஒரு தப்பிக்கும் உத்தியாக கையாண்டதே தவிர, கடப்பாடுகளை நிறைவேற்றவதில் அக்கறை கொண்டிருக்கவில்லை.

அவ்வப்போது எழுகின்ற சர்வதேச நெருக்கடிகளை தணித்து, பொறியில் இருந்து தப்பிக்கும் அணுகுமுறைகளே கையாளப்பட்டன.

கடந்த எட்டு ஆண்டுகளில், இலங்கையில் ஆட்சியில் இருக்கும் எந்த அரசாங்கமானாலும், இவ்வாறுதான் செயற்படும், கடப்பாடுகளை நிறைவேற்றாது என்ற தெளிவான புரிதலுக்கு சர்வதேச சமூகம் வந்திருக்கிறது.

ஆரம்பத்தில் இருந்தே, தமிழ் மக்களுக்கு இந்த தீர்மானங்களின் ஊடாக தங்களுக்கு நியாயம் கிட்டும், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாவிட்டாலும், சர்வதேச படிமுறைகளைத் தாண்டித் தான் அதனை அடைய வேண்டும் என்ற புரிதல் இருந்தது.

இப்போது இந்த இரண்டு தரப்பின் புரிதல்களும், கிட்டத்தட்ட ஒரே நோர்கோட்டுக்கு வந்துள்ளன.

இனி மேலும் உள்ளக பொறிமுறைகள் சாத்தியமில்லை, இலங்கை அரசாங்கம் அதனை செயற்படுத்தும் என்று நம்பிக் கொண்டிருக்க முடியாது என்ற நிலைக்கு இரண்டு தரப்புகளும் வந்திருக்கின்றன.

சர்வதேச பொறிமுறை ஒன்றை நோக்கி நகர வேண்டும் என்றும், பாதுகாப்புச் சபைக்கோ, பொதுச்சபைக்கோ கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும் இருதரப்புகளும் தீர்மானித்துள்ளன.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடுவதை விட வேறு வழியில்லை என்ற முடிவும் இப்போது பிரதிபலிக்கிறது.

இவ்வாறான நிலைக்கு தமிழ் மக்கள் ஏற்கனவே வந்திருந்ததால் தான், சர்வதேச விசாரணைப் பொறிமுறையை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.

காலம் காலமாக இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றி வந்தமையால், தமிழ் மக்கள் யதார்த்த நிலையைப் புரிந்து கொண்டு அந்த கோரிக்கையை முன்வைத்தனர்.

ஆனால், பூகோள அரசியல் சூழமைவுகளும், சர்வதேச நாடுகளின் நிலைப்பாடுகளும், இலங்கை அரசைப் புரிந்து கொள்வதில் காணப்பட்ட சிக்கலும், அவ்வாறான முடிவுக்கு அவர்களால் வர முடியவில்லை.

இப்போது சர்வதேசப் பொறிமுறை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்றவற்றை நோக்கிய அழைப்பு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழர்களை திருப்திப்படுத்தும் ஒன்றாக இருக்கும் நிலையில், இந்த விடயங்களை உள்ளடக்கிய தீர்மானம் ஒன்று, இந்தக் கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடத்தில் காணப்படுகிறது.

ஆனால், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கைக்கும், ஜெனிவா கூட்டத்தொடரின் நிறைவேற்றப்படும் தீர்மானத்துக்கும் பெரும்பாலும் பெரிய இடைவெளி காணப்படுவது வழக்கம்.

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகம் சுதந்திரமாக செயற்படும் கட்டமைப்பு. 

ஆனால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை, 47 உறுப்பு நாடுகளாலும் கட்டுப்படுத்தப்படுகின்ற ஒரு அவை. அங்கு பெரும்பான்மை நாடுகளின் முடிவுகள் தான் செல்வாக்குச் செலுத்தும்.

அதைவிட, குறித்த நாடுகளுக்கு இருக்கு செல்வாக்கும், தீர்மானங்களின் தன்மையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனவே, ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கைக்கு அமைய, பேரவைத் தீர்மானம் அமைய வேண்டும் என்பது கட்டாயமல்ல.

ஆனாலும், இந்தமுறை கொண்டு வரப்படும் தீர்மானம், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையை ஒட்டியதாக, அதனுடன் இணங்கிப் போகக்கூடிய ஒன்றாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம்.

இந்தநிலையில் தான் இலங்கைக்கு சவால்களும், நெருக்கடிகளும் இம்முறை அதிகமாக உள்ளன.

வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகும் கூட்டத்தொடர், மெய்நிகர் முறையிலேயே இடம்பெறவுள்ளது. இதனை இலங்கை அரசாங்கம் விரும்பவுமில்லை, எதிர்பார்க்கவுமில்லை.

ஜெனிவாவில் கூட்டத்தொடர் இடம்பெறுமானால், நாடுகள் மத்தியில் பிரசாரம் செய்வதும், அவற்றின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதும் சுலபம்.

ஆனால் அந்த வாய்ப்பு இப்போது இலங்கைக்கு பெரும்பாலும் இல்லாமல் போயுள்ளது.

பேரவைக் கூட்டத்தொடரை மெய்நிகர் முறையில் நடத்துவதற்கு ஒழுங்கமைப்புக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட போது, அதற்கு இலங்கையும், பாகிஸ்தானும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.

அதேவேளை கொரோனா தொற்று சூழல் மற்றும் மெய்நிகர் முறையில் நடத்தப்படும் கூட்டத்தொடர் என்பதால், நாடுகளுக்கு எதிரான தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்படாது என்ற ஒரு நம்பிக்கையும் இலங்கை அரசாங்கத்திடம் இருப்பதாக தெரிகிறது.

அதனை அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர வெளிப்படுத்தியிருக்கிறார். எனினும், தீர்மானம் முன்வைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதனை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இந்தக் கூட்டத்தொடரில், வரும் 24ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.

அதற்குப் பின்னர், கூட்டத்தொடரின் இறுதியில் தான், இலங்கை தொடர்பான தீர்மானம் முன்வைக்கப்படும்.

இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குள் தான், தீர்மான வரைவு அனுசரணை நாடுகளால் முன்வைக்கப்பட்டு, அதன் இறுதி வடிவம் தீர்மானிக்கப்படும்.

இதுவரையில் முன்வரைவு ஏதும் தயாரிக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை என்றாலும், அனுசரணை நாடுகளின் மத்தியில் தீர்மான வரைவு குறித்த சில தெளிவான நிலைப்பாடுகள் இருப்பாக அறிய முடிகிறது.

கடந்த சில ஆண்டுகளில் ஐ.நா. மனித உரிமைகள் பேரைவையின் நேரடியான செயற்பாடுகளில் இருந்து அமெரிக்கா விலகியிருந்தது.

இந்த முறை அமெரிக்கா கண்காணிப்பு நிலை நாடாக பேரவையில் இடம்பெறுகிறது. அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றமானது, அனுசரணை நாடுகளின் தீர்மானத்துக்கு ஆதரவாக, அமெரிக்கா வெளிப்படையாகச் செயற்படுவதற்கான சூழலையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இவை மாத்திரமே இலங்கைக்கு உள்ள நெருக்கடிகள் அல்ல.

சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கியூபா போன்ற நாடுகளையும் சில அரபு நாடுகளையும் கைக்குள் வைத்துக் கொண்டு, ஜெனிவா களத்தில் வெற்றியைப் பெற்று விடலாம் என்று  அரசாங்கம் நம்புகிறது.

ஜெனிவாவில் தோற்றுப் போகும் நிலை ஏற்பட்டாலும், ஐ.நா. பாதுகாப்புச் சபையைத் தாண்டுவதற்கு சீனா தனது வீட்டோவைப் பயன்படுத்தி தடுத்து விடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் அரசாங்கத்திடம் இருக்கிறது.

ஆனாலும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், நிறைவேற்றப்படும் தீர்மானத்தில், போர்க்குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் இராணுவ அதிகாரிகளின் சொத்துக்களை முடக்கவும், பயணத் தடைகளை விதிக்கவும், வலியுறத்தப்பட்டால், அது இலங்கைக்குப் பெரும் பின்னடைவாகவே இருக்கும்.

ஏற்கனவே, இராணுவத் தளபதிக்கு அமெரிக்கா தடைவிதித்துள்ள நிலையில், மேலும் பல அதிகாரிகள் அந்த தடைக்குள் சிக்கிக் கொள்வார்கள்.

அதுமாத்திரமன்றி பொறுப்புக்கூறல் விவகாரம் இலங்கை அரசின் கைகளை மீறிச் செல்லும் சூழலை உருவாக்குமா என்பதும் இந்தக் கூட்டத்தொடரில் தான் வெளிப்படப் போகிறது.

அவ்வாறு செல்லுமானால், அது சர்வதேச அளவில் இலங்கைக்கு பெரும் பின்னடைவு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04