(எம்.எப்.எம்.பஸீர்)

அரசியல் பழிவாங்கல்கள் குறித்து  விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினராக மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி சோபித்த ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார். 

Image result for ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு virakesari

இதற்கான வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதி கோத்தாபயவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே குறித்த ஆணைக் குழுவுக்கு நியமிக்கப்பட்டிருந்த நீதிபதி ரத்னபிரிய குருசிங்க, குறித்த ஆணைக் குழுவிலிருந்து விலகிய நிலையிலேயே நீதிபதி சோபித்த ராஜகருணா வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நியமித்திருந்தார்.

உயர் நீதிமன்ற நீதியரசர்  பிரியந்த  ஜயவர்தனவின் தலைமையிலான மூவர் கொண்ட  இந்த ஆணைக்குழுவில் உயர் நீதிமன்ற நீதியரசர் குமுதுனி விக்ரமசிங்க மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரத்னப்பிரிய குருசிங்க ஆகியோர் உள்ளடங்கியிடுந்தனர்.

1978 ஆம் ஆண்டின் விஷேட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுக்கள் ( விசேட ஏற்பாடுகள்) சட்டத்தினால் திருத்தப்பட்ட, தேசிய அரசுப் பேரவையின் 7 ஆம் இலக்க விஷேட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய  இந்த ஆணைக் குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக 2021 ஜனவரி 29 ஆம் திகதியிடப்பட்ட 2212/53 ஆம் இலக்க அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி தொடக்கம் 2019 நவம்பர் 16 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அண்மையில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையிலுள்ள பரிந்துரைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

குறித்த அறிக்கையில் விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்து அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையொன்றை ஏற்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதற்கமையவே இந்த ஆணைக் குழு, ஜனாதிபதியால் தனக்குள்ள அதிகாரத்துக்கு அமைய ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக  வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி அடுத்து வரும் 3 மாதங்களுக்குள் விசாரணைகளை மேற்கொண்டு தீர்ப்புகளுக்கு அமைய வழங்க வேண்டிய தண்டனைகளை குறிப்பிட்டு இறுதி அறிக்கை அல்லது இடைக்கால அறிக்கையொன்றை தம்மிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, தாம் நியமித்த விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழு கவனத்திற்கொள்ள வேண்டிய 4 முக்கிய விடயங்கள் தொடர்பிலும் அதி விசேட வர்த்தமானியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பிலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைய, வழங்கப்பட்ட சத்தியப் பிரமாணத்தை மீறுதல் மற்றும் அரசியலமைப்பின் ஏற்பாடுகளை மீறுதல் என்பன முதலாவது விடயமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது விடயமாக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் அல்லது அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தல், தலையீடு செய்தல், மோசடி செய்தல், ஊழல், குற்றவியல் துஷ்பிரயோகம், குற்றவியல் நம்பிக்கை மீறல் அல்லது உறவினர்களுக்கு சலுகை செய்தல் ஆகிய விடயங்கள் குறித்தும் இந்த ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும் என பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

ஒருவரிடமிருந்து அரசியல் ரீதியாக பழிவாங்கப்படல் மூன்றாவது விடயமாக அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருவருக்கு நியமனம் வழங்கப்படும்போது அல்லது நியமனம் செய்யும்போது, பதவி உயர்வு வழங்கும்போது சேவையை முடிவுறுத்தும்போது ஏதேனும் முறைகேடு, ஏதேனும் எழுத்துமூலமான சட்டமீறல்கள் இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பில் பிரதிவாதிகள் எந்தளவிற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்பதை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

1978 ஆம் ஆண்டின் ஏழாம் இலக்க விசேட ஜனாதிபதி ஆணைக்குழு சட்டத்தின் ஒன்பதாம் பிரிவிலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைய, குறித்த அறிக்கையின் பிரகாரம் யாரேனும் ஒருவரை சமூக இயலாமைக்கு உட்படுத்துவதற்கு பரிந்துரை செய்வதற்காகவும் இந்த ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இவ்வாறான நிலையிலேயே, அவ்வாணைக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட நீதிபதி ரத்னபிரிய குருசிங்க விலகியுள்ளார். அந்த வெற்றிடமே தற்போது நீதிபதி சோபித்த ராஜகருணாவை நியமித்தமை ஊடாக நிரப்பட்டுள்ளது.