சி.அ.யோதிலிங்கம்

எந்த ஒரு அரசியலுக்கும் ஆரோக்கியமான விமர்சனங்கள் அவசியமானவை. ஆனால், அவை அந்த அரசியலின் இலக்கினை பாதிக்காததாக இருக்கவேண்டும். தமிழ் அரசியலுக்கும் இது பொருந்தக்கூடியதே! துரதிஸ்டவசமாக தமிழ் அரசியலில் விமர்சனக் காலாசாரம் போதியளவுக்கு வளர்ச்சியடையவில்லை. விமர்சனம் என்ற பெயரில் தனி நபர் தூற்றுதல்களும் வசைபாடல்களுமே மேலோங்கியுள்ளன. 

அதற்கு அண்மைக்காலமாக அதிகரித்துள்ள சமூக ஊடகங்களில் ஒன்றான முகநூலில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட பதிவுகள் இதற்குமிகப்பெரிய எடுத்துக்காட்டுக்களாகும். விமர்சனத்தின் நோக்கம் ஆட்களையும், அமைப்புக்களையும் விழுத்துவதல்ல. மாறாக தவறுகளை திருத்தி அரசியலை முன்நோக்கி நகர்த்துவதே.

கத்தோலிக்க மத உயர் பீடமான வத்திக்கான் திருச்சபையில் மதகுரு ஒருவர்  திருச்சபையை எதிர்த்துப் பேசுவதற்காக நியமிக்கப்பட்டிருப்பார். அவரது பணி திருச்சபை விடுகின்ற தவறுகளை காரசாரமாக விமர்சிப்பதேயாகும். திருச்சபை விடும் தவறுகளை திருத்திக் கொள்வதற்காகவே இவ்வாறான நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இடது சாரி சிந்தனையியலில் விமர்சனம்,சுயவிமர்சனத்திற்கு முக்கிய இடம் உண்டு.

இடது சாரி சிந்தனையின் மூலவர்களான லெனினும், மாசேதுங்கும் இதனைக் கடுமையாக முன்னெடுத்தனர். இதற்கான ஒரு களத்தை அரசியல் இயக்கங்களில் தோற்றுவிப்பதற்காகவே “ஜனநாயக மத்தியத்துவம்” என்ற கோட்பாடு அங்கு பிரபல்யப்படுத்தப்பட்டது. கருத்துகளைக் கூறுவதற்கு அங்கு அனைவருக்கும் ஜனநாயகம் வழங்கப்பட்டதோடு வலுவான தீர்மானங்களை எடுப்பதற்காக ‘மத்தியத்துவம்’ என்ற சிந்தனையும் உட்புகுத்தப்பட்டது. 

வடக்கு-கிழக்கு தமிழ்ச் சிவில் சமூகத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த “பொத்துவில் முதல் பொலிகண்டி வரை”  பேரணி இன்று வலுவான வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. கடுமையான விமர்சனங்கள் அது தொடர்பாக வெளிவந்திருக்கின்றன. 

அவற்றில் பல வெறும் வசை பாடல்களாகவே இருந்தனவே தவிர, ஆரோக்கியமானவையாக இருக்கவில்லை. எனினும் ஒரேயொரு மகிழ்ச்சி இந்த விமர்சனங்கள் எதுவும் அந்தப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை எந்த வகையிலும் குறைத்துவிடவில்லை.

இக்கட்டுரையாளார் சென்ற வாரம் இந்தப் பேரணியின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டல்களுடன் தெரிவித்திருந்தார். பேரணியின் முக்கியத்துவத்திற்கு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக பாரிய விமர்சனங்கள் எவற்றையும் முன்வைக்கவில்லை. எனினும், ஆரோக்கியமான அரசியலுக்கு விமர்சனங்கள் அவசியம் என்ற வகையில் இந்தவாரம் தனது விமர்சனக் கருத்துக்களை முன்வைக்கின்றார். 

“பொத்துவில் முதல் பொலிகண்டி வரை” பேரணியைப் பொறுத்தவரை அதன் முதலாவது குறைபாடு திட்டமிடலுடன் கூடிய ஒழுங்கமைப்பு இல்லாமையாகும். அவசர அவசரமாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டமாக இந்தப் போராட்டம் இருந்தமையினால் இந்தக் குறைபாடு ஏற்பட்டிருக்கலாம். தவிர, இவ்வளவு பெருந்திரளாக மக்கள் கலந்துகொள்வார்கள் என்றோ, முஸ்லிம் மக்கள் திரளாகக் கலந்துகொள்வார்கள் என்றோ ஏற்பாட்டாளர்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. 

ஆகக் கூடினால் ஆயிரம்பேர் கலந்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. படையினரால் தடுக்கப்படலாம் என்ற ஊகமும் இருந்தது. தடைகளை உடைத்துக்கொண்டு செல்லாம் என்பதில் அவர்கள் பெரியளவு நம்பிக்கை வைக்கவில்லை. 

ஒழுங்கமைப்பும், திட்டமிடலும் வலுவாக இருந்திருந்தால் கடைசிநேர குழப்பங்களைத் தவிர்த்திருக்கலாம். பொலிகண்டியில் எங்கே முடிப்பது என்பது தொடர்பிலும் தெளிவான தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை. பருத்தித்துறை பொலிஸாரின் தடைக் கட்டளையும் அவ்வாறான தெளிவான முடிவுகள் எடுக்காமைக்கு ஒரு காரணமாகவும் இருந்தது. 

பொலிகண்டி ஆலடிச் சந்தியிலேயே முடிப்பது எனத் தீர்மானம் இருந்ததாக தகவல். ஆனால் அவ்விடம் பெருந்திரளைத் தாங்கக் கூடியதாக இருக்கவில்லை. வாகனங்களை நிறுத்துவதற்கு சரியான இடம் ஒதுக்கப்படாமை பெரிய நெருக்கடியாக இருந்தது. இறுதியில் குண்டுவெடிப்பு நடந்த சனசமூகநிலையத்தடியில் முடிப்பது என்று தீர்மானித்து ஒரு பகுதியினர் அவ்விடத்தை நோக்கியே நடந்தனர். 

உண்மையில் அவ்விடம் பொலிகண்டியல்ல. வல்வெட்டித்துறையே. இதனால் பொலிகண்டி மக்கள் குழம்பி எதிர்ப்பைத் தெரிவிக்க முற்பட்டனர். இம்முடிவு  “பொத்துவில் முதல் பொலிகண்டி வரை” என்ற இலக்கிற்கும் பொருத்தமானதாக இருக்கவில்லை. உண்மையில் பொலிகண்டியில் அடையாளத்திற்கு முடித்துவிட்டு வல்வெட்டித்துறைவரை பேரணியை நகர்த்தி அங்கு பொதுக் கூட்டத்தை நடத்தியிருக்கலாம். 

பொதுக்கூட்டத்ததை யார் நடத்துவது என்பதிலும் தெளிவு இருக்கவில்லை. அதுபற்றி வலுவான தீர்மானம் எடுத்திருந்தால் சுமந்திரனின் முறையற்ற செயற்பாடுகளைத் தவிர்த்திருக்கலாம். சாணக்கியனுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளையும், பேரணியின் வடமாகாண இணைப்பாளர் இளங்கோ (தந்தை செல்வாவின் பேரன்) தள்ளுமுள்ளுகளுக்குள் காயப்பட்டதையும் தவிர்த்திருக்கலாம். 

இதைவிட ஏற்பாட்டாளர்கள் இந்தப் பேரணி தொடர்பாக பொது அமைப்புக்களுடன் போதியளவிற்கு உரையாடவில்லை. அதற்குப் போதிய நேரம் கிடைக்கவில்லை என்ற காரணம் இருந்தபோதும், முடிந்தவரை முயற்சித்திருக்கலாம். 

யாழ்ப்பாணத்தில் நடந்த கலந்துரையாடல்கூட ஏற்கனவே தீர்மானித்த முடிவுகளை அறிவிக்கும் கூட்டமாக இருந்ததே தவிர, அபிப்பிராயங்களைப் பெற்று தீர்மானங்களை எடுக்கும் கலந்துரையாடலாக இருக்கவில்லை. உண்மையில் இதுபோன்ற போராட்டங்களுக்கு ஒருமாத திட்டமிடலாவது வேண்டும். ஆனால், இங்கு பத்து நாட்கள்கூட இருக்கவில்லை. 

இரண்டாது குறைபாடு பேரணிக்கு பொது முகமே பெரிதாக இருக்கவேண்டும். இதற்கு மாறாக இங்கு அரசியல்வாதிகளின்முகமே பெரிதாக இருந்தமை பெருங்குறையாக விட்டது. சுமந்திரனும் சாணக்கியனும் இந்தப்போக்கில் முனைப்பாக இருந்தனர். பொலிஸாரின் தடைகளை உடைத்தமைக்கும், முஸ்லிம்கள் பெரும்திரளாகக் கலந்துகொண்டதற்கும் இவர்கள்தான் காரணமாக இருந்தனர் என்பதற்கு மாற்றுக் கருத்துக் கிடையாது. 

சாணக்கியன் இல்லாவிட்டால் பேரணி பொத்துவிலோடே நின்றிருக்கும். கிழக்கு மாகாணத்தைக் கடப்பதற்கே வாய்ப்பே இருந்திருக்காது. இவை உண்மையாக இருந்தாலும் சாணக்கியன்  பேரணிக்குரிய பொது முகத்தைக் கொடுப்பதற்கு ஒத்துழைப்பை வழங்கியிருக்கவேண்டும். சுமந்திரனின் நிகழ்ச்சிநிரலுக்குள் சிக்குண்டு கூட்டாச் செயற்பாட்டை தவிர்த்திருக்க வேண்டும்.

சாணக்கியனுக்கு வட-கிழக்கில் மட்டுமல்ல தமிழ் உலகம் முழுவதிலும் பேரணியின் ஆரம்ப நாளின் பின்னர் நற்பெயர் ஏற்பட்டிருந்தது. அவருடைய துணிவு, அவருடைய உடற் செயற்பாடு,மொழி ஆற்றல், உடல்மொழி அனைத்துமே உன்னதமானவை. ஒரு வகையில் அவரை தமிழ்த் தேசிய அரசியலுக்கு கிடைத்த மிகப் பெரும் சொத்து எனலாம். ஆனால் அவர் சுயாதீனமாக இயங்காமையால் அந்த விம்பங்கள் சற்று உடைந்து போய்விட்டன; சந்தேகங்கள் ஏற்பட்டு விட்டன;

இப்பேரணியில் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் அரசியல் வாதிகளுக்குமிடையிலான முரண்பாடு ஆரம்பத்திலிருந்தே இருந்தபோதும் திருகோணமலையில் அது வெடிப்புக்குள்ளானது. அருட்தந்தை எழில், அருட்திரு வேலன் சுவாமிகள் ஆகியோரின் காட்டமான அறிக்கைகளும் இது தொடர்பாக வெளிவந்தன.

இதன் பின்னர் மதத் தலைவர்கள் முன்னேவர அரசியல்வாதிகள் பின் வரிசையில் வந்தனர். மதத் தலைவர்களுக்கு இளைஞர்கள் சுற்றிவர கைகோர்த்து பாதுகாப்பு கொடுத்தனர். இந்த ஏற்பாட்டை சுமந்திரன் ஏற்கவில்லை. சந்தர்ப்பம் வரும் வரை சகித்துக் கொண்டார். 

சகிப்புத்தன்மையின் உச்சமாக அவர் இரு நாட்கள் பேரணியில் பங்கேற்காது கொழும்புக்கும் திரும்பியிருந்தார். முக்கிய கூட்டங்கள் என்று அதற்கு காரணமும் கற்பித்திருந்தார். ஆனால், இறுதி நாளில் கிளிநொச்சியில் பேரணி ஆரம்பமாகிய போதே அவர் தன்னுடைய மனோநிலையை வெளிப்படுத்த ஆரம்பித்திருந்தார். 

தனது கட்சிக்காரரான சிறிதரனுடனே நகைச்சுவையாக ஆரம்பித்து தர்க்கம் ஈற்றில் சரமாரியாகச் சென்றிருந்தது. ஈற்றில் பொலிகண்டியில் “தாங்களே ஆரம்பித்த பேரணியை தாங்களே முடிப்பதாக ஒலிவாங்கியில் அறிவித்து” அடக்கி வைத்திருந்தவற்றை வெளிப்படுத்தி தீர்த்துக்கொண்டார். ஆனால், அவர் தனியாக கூட்டம் நடத்தியிருந்தார். அதனால்தான் குழப்பங்களும் தோன்றியிருந்தன.

மூன்றாவது பேரணியின் நோக்கம் மக்களை அரசியல் மயப்படுத்தி விழிப்பூட்டுவதாகவும் இருந்திருக்க வேண்டும். இதற்கு வரும் வழிகளில் சிறிய சிறிய கூட்டங்களை நடத்துவதோடு, பேரணியின் நோக்கத்தை வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்களையும் வழங்கியிருக்கலாம். 

பேரணியின் ஏற்பாட்டாளர்களினால் உத்தியோக பூர்வமாக பிரசுரம் எதுவும் மக்கள் மத்தியில் விநியோகிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் தினமும் பேரணி முடிகின்ற இடத்தில் சிறிய கூட்டங்களை நடத்தியிருக்கலாம். பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்களுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் அதில் பேசுவதற்கும் இடம் கொடுத்திருக்கலாம். எந்த இடத்தில் பேரணி அன்றைய இடம் முடிவடைகின்றதோ அந்த பிரதேச முக்கியஸ்தர்களுக்கும் கருத்துக்கூற இடம் கொடுத்திருக்கலாம். தவிர, பேரணியினர் தங்குவதற்கு விடுதிகளை ஒழுங்குசெய்யாது  கிராமங்களில் மக்களுடன் மக்களாக இரவுப்பொழுதைக் கழிப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்திருக்கலாம்.  உணவுத் தேவைகளையும் மக்களைக் கொண்டே பூர்த்தி செய்திருக்கலாம். விடுதிகளிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்வது மக்கள் பேரணிக்கு அழகல்ல, மக்களுக்காக போராடுபவர்கள் என்ற வகையில் உணவு, பாதுகாப்பு என்பவற்றிற்கு போராட்டக்காரர்கள் மக்களிலேயே தங்கியிருக்க வேண்டும்.

விசேடமாக கிழக்கு மாகாணத்திலிருந்து வடக்கிற்கு பேரணியில் கலந்து கொண்ட பிரமுகர்கள் உள்ளிட்டவர்களை இவ்வாறு தங்கவைப்பதன் ஊடாக புதிய பிணைப்பினை மேலும் வலுவாக்கியிருக்கலாம். விசேடமாக சாணக்கியன் போன்றவர்கள் நட்சத்திர விடுதிகளை தவிர்த்து வடக்கு மக்களின் வாழ்வியலை நேரடியாக உணர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் இருந்தும் அது தவறவிடப்பட்டுள்ளது.

தோழர் மாசேதுங் நீண்ட பயணத்தின்போது வழி நெடுகவும் போராட்டக் காரர்களுக்கு மக்களே உணவளித்தார்கள். பாதுகாப்பை வழங்கியிருந்தார்கள் அவ்வாறான ஒரு கலாசாரத்ததை தமிழ்த் தரப்பும் உருவாக்கியிருக்க வேண்டும். 1956ஆம் ஆண்டு இடம்பெற்ற திருமலை யாத்திரையின்போது, போராட்டக்காரர்களுக்கு அவ்வப்பிரதேச மக்களே உணவுகளை வழங்கியதோடு பாதுகாப்பையும் வழங்கியிருந்தனர்.

தமிழ் அரசியல் மரபைப் பொறுத்தவரை மக்கள் பங்கேற்பு அரசியல் மிகவும் பலவீனமானது. தமிழரசுக் கட்சிக்காலத்தில் தொண்டர்கள் மட்டுமே போராட்டங்களில் பங்கேற்றனர். மக்கள் வாக்குபோடுவதோடும் அவ்வப்போது  போராட்டங்களில் கலந்து கொள்வதோடும் தமது கடமைகளை மட்டுப்படுத்திக் கொண்டனர். 

ஆயுதப் போராட்டகாலத்தில் போராளிகளே போராட்டங்களில் களம் கண்டனர். மக்கள் நிதி உதவிகளை வழங்குவதோடும் அவ்வப்போது ஊர்வலங்களில் கலந்து கொள்வதோடும் தமது கடமைகளை வரையறுத்துக்கொண்டனர். 

இதனால் தமிழ் அரசியலில் மக்களின் பாத்திரம் வெறும் ‘பார்வையாளன்’ என்பதாகவே இருந்தது. மக்கள் பங்கேற்பு அரசியல் என்பது மக்களை அரசியல் மயப்படத்தி அமைப்பாக்குவதே. அந்த விடயத்தில் தமிழ்த் தேசிய அரசியலில் பாரிய பின்னடைவுகள் இன்னமும் காணப்படுகின்றமை கவலைக்குரியதாகும். 

மக்களுடன் நெருக்கமாக இருப்பதே மக்கள் பங்கேற்பு அரசியலின் முதல்படியாகும். மேற்கூறிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கும் சமயத்தில் போராட்டக்காரர்களுக்கும், அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும் மக்களுடன் நெருக்கமாவதற்குரிய வழிவகைகளை அதிகளவில் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும். 

இத்தகைய மக்கள் பங்கேற்பு அரசியல் இல்லாதபடியால் தான் ஒரு ஜனநாயக அரசியல் இயக்கத்தையோ, அதன்வழி ஒரு ஜனநாயக ஐக்கிய முன்னணியையோ தமிழ்த் தரப்பால் உருவாக்க முடியவில்லை. இது தமிழின விடுதலைப் போராட்டத்தை மிகப் பெரும் பலவீனத்திற்கு கொண்டுசென்றுவிட்டது. 

மக்களிடமும் குத்தகை மனோபாவம் வளர்ந்திருந்தது. அதாவது இப்போராட்டம் மக்களுக்கானது, மக்களால் நடத்தப்படுவது என்ற நிலைமாறி யாராவது போராடி எமக்கு விடுதலையைப் பெற்றுத்தரவேண்டும் என்ற மனோபாவமே மக்களிடம் வளர்ந்திருந்தது.  இதுவே குத்தகை மனோபாவம் என்று அழைக்கப்படுகின்றது. இதன் இன்னோர் விளைவு அக முரண்பாடுகளான சாதி, மத, பிரதேச, பால் முரண்பாடுகளையும் வினைத்திறனுடன் கடக்க முடியாத நிலைமையை ஏற்படுத்துகின்றது. 

நான்காவது குறைபாடு சமகாலத்தில் புலத்திலும் தமிழகத்திலும் போராட்டத்தை வலுப்படுத்தாமையாகும். இக்கட்டுரையாளர் அடிக்கடி சுட்டிக்காட்டுகின்ற விடயம் தமிழ் மக்கள் எண்ணிக்கையில் குறைந்த தேசிய இனம். அது தனது விடுதலைக்கு அக ஆற்றலை மட்டும் நம்பியிருக்க முடியாது. புற ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். 

இதற்குச் சேமிப்புச் சக்திகளான மலையகத் தமிழர் உட்பட உலகத் தமிழர்களையும் நட்புச் சக்திகளான சிங்கள முற்போக்கு  ஜனநாயக சக்திகள் மற்றும் உலக முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் தமிழ் மக்களுக்கு பின்னால் அணி திரட்ட வேண்டும். நிலம்-புலம்-தமிழகம் இடையே ஒரு ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் மூலம்தான் இதனை சாத்தியமாக்க முடியும். 

இந்தப் பேரணியைப் பொறுத்தவரை புலம்பெயர் நாடுகளில் சில முயற்சிகள் நடந்தன. அதுவும்கூட வலுவான போராட்டங்கள் எனக் கூறிவிட முடியாது. அந்த நாடுகளின் அரசுகளைத் திரும்பப் பார்க்கக்கூடியதாக போராட்டங்களை நடத்தி உலகத்தின் கவனத்தை நம்பால் வலுவாக திருப்பியிருக்க வேண்டும். 

ஆனால் அவ்விதமான முயற்சிகள் எடுக்கப்படவில்லை. அங்கும் பிளவுகளுடன் இரண்டு மூன்று பேரணிகள் நடைபெற்றமையையும் அவதானிக்க முடிந்திருந்தது.

இந்தப் பேரணிக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் போராட்டங்கள் பெரியளவிற்கு இருக்கவில்லை. அரசியல் தலைவர்களின் அறிக்கைகள் மட்டுமே வந்தன.  அரசியல் அறிக்கைக்கு தற்போதைய தேர்தல் காலம் இதற்கு காரணமாக இருக்கலாம். கடுமையான முயற்சிகளைச் செய்திருந்தால் அங்கும் போராட்டங்களை நடத்தியிருக்கலாம். அங்கும்கூட அரசியல்வாதிகளை கடந்து ஈழத்தமிழர்களுக்கான அரசியல் பெரியளவிற்கு செல்லவில்லை. அங்குள்ள பொது அமைப்புக்களுடன் தமிழ்த்தேசிய சக்திகளின் ஊடாட்டம் மிகக் குறைவாகவே இருக்கின்றது. ஆகவே அதனை முதலில் கட்டியெழுப்புவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகின்றது.

ஐந்தாவது குறைபாடு போராட்டத்தில் புலம்பெயர் சமூகத்தின் வகிபங்காகும். ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்த்தேசிய அரசியலை தக்க வைப்பதில் புலம்பெயர்ந்தோரின் வகிபங்கை குறைத்து மதித்துவிட முடியாது. ஆனாலும் தாயகத்தில் நடக்கும் விவகாரங்களைப் பொறுத்தவரை புலம்பெயர்ந்த தரப்பினர் பங்காளர்களாக இருக்கவேண்டுமே தவிர, ‘ரிமோட்கொண்ரோலர்களாக’ இருக்கக் கூடாது.

“துரதிஸ்டவசமாக இங்கே நடக்கும் விவகாரங்களில் தமது நிதிப் பங்களிப்பைக் காரணமாக வைத்து புலம்பெயர் சமூகம் ‘ரிமோட்கொண்ரோலர்களாகவே’இருக்க விரும்புகின்றது. இப்பேரணியில் இது அதிகமாக இருந்தது என்றே தகவல்கள் வந்துள்ளன. கடைசிநேரக் குழப்பத்திற்கு இதுவுமொரு காரணம் எனக் கூறப்படுகின்றது. 

மொத்தத்தில் இதுபோன்ற பல குறைபாடுகள் இருந்தாலும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியின்  முக்கியத்துவத்தை எவரும் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது. மாறாக எதிர்காலத்தில் இது போன்ற தவறுகளைச் சீர்செய்து முன்னேறுவதற்கு நாம் முயலவேண்டும். நான்பெரிது, நீ பெரிது, நான் இயக்குகின்றேன், நீ இயங்குகின்றாய் இந்த மனோநிலைகள் மாற்றம் காண வேண்டும். 

தமிழ்த்தேசிய அரசியல் தொடர்ச்சியாக முன்னேறுவதற்கு தவறுகளைக் களைந்து முன்னேறுவதுதான் ஒரே வழியாகவுள்ளது. சிங்கள, பௌத்த தேசியவாதம் எவ்வாறு மக்கள் கூட்டத்தினை ஒருங்கிணைக்கின்றதோ அதேபோன்று தமிழ்த் தேசிய வாதமும் தனிநலன்களுக்கு அப்பால் ஒருங்கிணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகின்றது.