மற்றுமொரு ஜெனிவாக் கூட்டத்தொடர்: எதனை சாதிக்க முடியும்? 

Published By: J.G.Stephan

21 Feb, 2021 | 01:32 PM
image

-ரொபட் அன்டனி -

புதிய பிரேரணை ஒன்று இலங்கை குறித்து கொண்டுவரப்படும் பட்சத்தில் அரசாங்கம் முற்றுமுழுதாக அந்த பிரேரணையை எதிர்க்கும் என்றே தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறான நிலையில் குறித்த பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்படும்.

சீனா இலங்கைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி வாக்கெடுப்பில் இலங்கையை ஆதரித்து வாக்களிக்கமென்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தேவை ஏற்படும் பட்சத்தில் சீனா இலங்கைக்கு ஆதரவு கோரி அங்கு பிரசாரத்தில் ஈடுபடும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த தகவலை சீனாவுக்கான இலங்கை தூதுவர் உறுதிபடுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் நாளை திங்கட்கிழமை 22ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 23ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ள நிலையில் இம்முறை இலங்கைக்கு இந்த கூட்டத்தொடர் மிகவும் முக்கியமாக அமைந்திருப்பதுடன் பல்வேறு காரசாரமான விவாதங்களும் இடம்பெறவுள்ளன.

அதுமட்டுமன்றி ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் முன்வைத்திருக்கின்ற அறிக்கையை இலங்கை அரசாங்கம் அமர்வின்போது நிராகரிக்கவுள்ளதுடன் இலங்கை தொடர்பாக மற்றுமொரு பிரேரணையை கொண்டு வரப்படும் பட்சத்தில் அதனையும் முற்றாக நிராகரிக்கவிருக்கின்றது. இலங்கை தொடர்பாக மற்றும் ஒரு புதிய பிரேரணை கொண்டுவரப்படும் பட்சத்தில் அதனை இலங்கை அரசாங்கம் எதிர்க்கும்போது அங்கு வாக்கெடுப்பும் நடைபெறும். வாக்கெடுப்பின் போது சீனா நிச்சயமாக இலங்கைக்கு ஆதரவு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறான தீர்மானத்தை எடுக்கும் என்பதும் இங்கு பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகின்ற விடயமாக அமைந்திருக்கின்றது.

புதிய பிரேரணை
அதாவது இம்முறை இலங்கை மீது மற்றுமொரு பிரேரணை முன்வைக்கப்படும் பட்சத்தில் அந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் என்ன நடக்கும் என்பதும் எந்ததெந்த நாடுகள் ஆதரவு வழங்கும் எந்தெந்த நாடுகள் எதிர்க்கும் என்பதும் ஒரு பரபரப்பான ஒரு நிலையை  தோற்றுவித்திருக்கின்றது. இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வில் நடைபெறுகின்ற போதிலும் அதிகளவான நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பிரதான அமர்வில் தங்களது நாடுகளில் இருந்தவாறு இணைய வழியில் உரையாற்றவுள்ளனர்.  அந்த வகையில் நாளை 22ஆம் திகதி மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளின் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அண்டனியோ குட்டரேஸ் உரையாற்ற ஏற்பாடாகியுள்ளது.

 அதன் பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் உரையாற்றவுள்ளார். அவர் இதன்போது உறுப்பு நாடுகளின் மனித உரிமை நிலைமை தொடர்பான விடயங்கள் குறித்து தமது உரையில் பிரஸ்தாபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று பல்வேறு நாடுகள் முதல் மூன்று நாட்களில் உரையாற்றவுள்ளன. 22, 23, 24 ஆம் திகதிகளில் இந்த பிரதான அமர்வு நடைபெறவிருக்கின்றது. அந்த அமர்வில் ஆரம்பமாக ஜேர்மனி தென்னாபிரிக்கா டென்மார்க் ஸ்வீடன் ஜப்பான் பெல்ஜியம் அமெரிக்கா அவுஸ்திரேலியா கனடா பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வெளிவிவகார  அமைச்சர்கள் உரையாற்றவுள்ளனர்.

 அதேபோன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார செயலர்  உரையாற்ற ஏற்பாடாகியுள்ளது. மேலும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் மற்றும் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வோங் லீ ஆகியோரும் இந்த மாநாட்டில் அதாவது பிரதான அமர்வில் உரையாற்றவுள்ளனர். இந்த நாடுகள் பேரவையில் உரையாற்றும்போது இலங்கை தொடர்பாகவும் தமது கருத்துக்களை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இலங்கை குறித்த விவாதம்
இதேவேளை 24ஆம் திகதி இலங்கை தொடர்பான விவாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கிறது. இந்த விவாதம் தொடர்பாக ஒரு பரபரப்பான எதிர்பார்ப்பு தற்போது சர்வதேச மட்டத்திலும் இலங்கை மட்டத்தில் ஏற்பட்டிருக்கின்றது. இந்த விவாதத்தில் முதலாவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பான தனது மதிப்பீட்டு அறிக்கையை உத்தியோகபூர்வமாக பேரவையில் தாக்கல் செய்வார். அந்த அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் பல்வேறு பரிந்துரைகள், காரசாரமான விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பரிந்துரைகளை பொறுத்தவரையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் இலங்கையானது பொறுப்புக்கூறல் பொறிமுறையை சர்வதேச பங்களிப்புடன் முன்னெடுக்க வேண்டுமென்றும் பல்வேறு கடினமான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

 அதுமட்டுமன்றி பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இலங்கையானது மீண்டும் பழைய நிலைமைக்கு செல்லும் ஒரு நகர்வை கொண்டிருக்கின்றது என்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் அந்த அறிக்கைக்கு ஏற்கனவே இலங்கை அரசாங்கம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன் அதனை எதிர்த்து அறிக்கையையும் ஜெனிவாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. அதுமட்டுமின்றி தற்போது இந்த அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் உத்தியோகபூர்வமாக ஜெனிவா பேரவையில் சமர்ப்பித்த பின்னர் இலங்கையில் இருந்து வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இணையவழியில் உரையாற்றவுள்ளார்.

இதன்போது குறித்த அறிக்கையை இலங்கை முற்றாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவிருக்கின்றார். அதுமட்டுமன்றி தற்போது இலங்கை தொடர்பாக மற்றுமொரு பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு ஒரு தனிப்பட்ட நாட்டுக்கு எதிராக பிரேரணை ஒன்று ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட முடியாது என்ற விடயத்தையும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது உரையில் உள்ளடக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. காரணம் அவ்வாறு ஒரு அறிக்கையை கொண்டுவர முடியாது என்பதை இலங்கை  வலியுறுத்தவுள்ளது.

இணை நாடுகள்
அதன்பின்னர் பல்வேறு நாடுகள் இலங்கை தொடர்பில் உரையாற்றவுள்ளதுடன் இலங்கையிடம்  நல்லிணக்கம் தொடர்பாக கேள்விகளை எழுப்புவதற்கு எதிர்பார்க்கின்றன. அவ்வாறு அந்த விவாதம் 24 ஆம் திகதி ஜெனிவா நேரப்படி மாலை 5 மணிவரை நடைபெறுவதற்கு ஏற்பாடாகி இருக்கின்றது. அதன்பின்னர் பெப்ரவரி மாத இறுதிப்பகுதியில் அல்லது மார்ச் மாத முதல் பகுதியில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணையை பிரிட்டன் ஜெர்மனி கனடா உள்ளிட்ட நாடுகள் இணைந்து பேரவையில் தாக்கல் செய்யவுள்ளன.

அந்த பிரேரணை தற்போது தயாரிக்கப்பட்டுவிட்டதாகவே தெரிவிக்கப்படுகிறது. எனினும் அந்த பிரேரணை இதுவரை வெளியிடப்படவில்லை. இணை நாடுகள் பிரேரணையை தாக்கல் செய்ததும் அதில் திருத்தங்களை செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்படும். அதன்படி மார்ச் மாதம் 22 ஆம் திகதி அல்லது 23 ஆம் திகதி இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு மனித உரிமை பேரவையில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருக்கிறது. குறிப்பாக இலங்கையானது இந்த பிரேரணையை எதிர்த்து உரையாற்றவுள்ளது.  அந்தவகையில்  சம்பந்தப்பட்ட நாடு பிரேரணையை எதிர்க்கும் பட்சத்தில் அங்கு அந்த பிரேரணை தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய தேவை ஏற்படும். அதன்படி வாக்கெடுப்பு நடத்தப்படும். இம்முறை சீனா இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஐக்கிய நாடுகள்  மனித உரிமைப் பேரவை உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றன.  அமெரிக்கா இம்முறை மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடாக இடம்பெறவில்லை.  

சீனா இலங்கைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி வாக்கெடுப்பில் இலங்கையை ஆதரித்து வாக்களிக்கமென்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.  அதுமட்டுமன்றி தேவை ஏற்படும் பட்சத்தில் சீனா இலங்கைக்கு ஆதரவு கோரி அங்கு பிரசாரத்தில் ஈடுபடும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.  இந்த தகவலை சீனாவுக்கான இலங்கை தூதுவர் உறுதிபடுத்தியுள்ளார். 

அவ்வாறான ஒரு செயற்பாட்டில் சீனா ஈடுபடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதேவேளை இந்தியா எவ்வாறான தீர்மானத்தை எடுக்கும் என்று இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்தியா வாக்களிப்பில் கலந்து கொள்ளுமா அல்லது எதிர்த்து வாக்களிக்குமா அல்லது ஆதரித்து வாக்களிக்குமா என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. சர்வதேச மேடை ஒன்றில் இலங்கை  தொடர்பாக எவ்வாறான முடிவை இந்தியா எடுக்கும் என்பதை மனித உரிமைப் பேரவையின் வாக்கெடுப்பின்போது பார்த்துக்கொள்ள முடியும்.

அதேபோன்று புதிய பிரேரணை ஒன்று இலங்கை குறித்து கொண்டுவரப்படும் பட்சத்தில் அரசாங்கம் முற்றுமுழுதாக அந்த பிரேரணையை எதிர்க்கும் என்றே தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறான நிலையில் குறித்த பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்படும்.

வாக்கெடுப்பு
இலங்கைக்கு எதிரான எந்த ஒரு பிரேரணையாக இருந்தாலும் நகர்வாக இருந்தாலும் அதனை முழுமையாக இலங்கை அரசாங்கம் நிராகரிக்கும் மற்றும் எதிர்க்கும் என்று கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார். அதன்படி இலங்கை அரசாங்கம் குறித்த பிரேரணையை முழுமையாக நிராகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு இலங்கை ஜெனீவா பிரேரணையை நிராகரிக்கும் பட்சத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பது இங்கு கேள்வியாக எழுகிறது.

அவ்வாறு பிரேரணையை இலங்கை எதிர்க்கும் பட்சத்தில் ஒருவேளை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இந்த விடயத்தை பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்லலாம். ஆனால் பாதுகாப்பு சபைக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்படும் பட்சத்தில் அங்கு சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இலங்கைக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவிடாமல் இருப்பதற்காக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தும் என்று சீனாவுக்கான  இலங்கை தூதுவர் பாலித கோஹன ஏற்கனவே கேசரியுடனான செவ்வியில் தெரிவித்திருந்தார்.

அதன்படி எவ்வாறான நடவடிக்கை அல்லது நகர்வு இடம்பெறும் என்பதை எதிர்வு கூற முடியாத ஒரு நிலைமை காணப்படுகிறது.  அந்தவகையில் வழமைபோன்று மற்றுமொரு ஜெனிவா மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. ஆனால் கடந்த 12 வருடங்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படாத நிலை காணப்படுகின்றது. 2019 இல் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் கடந்த அரசாங்கம் அனுசரணை வழங்கியிருந்த 30.1 என்ற பிரேரணை மீதான அனுசரணையை முற்றாக மீளப் பெற்றுக் கொண்டது. அதன்படி அரசுக்கும் பிரேரணைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

 புதிய நகர்வு 
ஆனால் ஜெனிவா மனித உரிமைப் பேரவையுடன் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் என்ற ஒரு விடயத்தை இலங்கை அரசாங்கம் கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஜெனிவாவுக்கு அறிவித்திருந்தது. அத்துடன் தற்போது இலங்கை அரசாங்கம் மூவர் கொண்ட ஒரு குழுவை நியமித்திருக்கிறது. அந்த ஆணைக்குழுவானது பொறுப்புக்கூறல் தொடர்பாக கடந்த காலங்களில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை ஆராயவுள்ளதுடன் பொறுப்புக்கூறல் தொடர்பாகவும் ஆராய்கின்றது.

இந்த ஆணைக்குழுவில் எந்த ஒரு தரப்பினரும் தமக்கு அநீதி இழைத்திருப்பதாக கருதினால் முறைப்பாடு செய்ய முடியும் என்று வெளிவிவகார அமைச்சர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். அந்தவகையில் அரசாங்கம் இவ்வாறு ஒரு ஆணைக்குழுவை நியமித்து அதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கையின் சார்பில் ஜெனிவாவுக்கு இம்முறை கூறப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.  எப்படியிருப்பினும் ஜெனிவா மனித உரிமை பேரவையில் எவ்வாறான காரசாரமான அறிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் கூட இவ்வாறு நகர்வுகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் கூட கடந்த 12 வருடங்களாக இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்ட மக்களாகவே இருக்கின்றனர். அவர்களது கேள்விகளுக்கு விடை கிடைக்காத நிலைமையை நீடித்துக்கொண்டிருக்கின்றது.    

தமிழர் தரப்பு
புலம்பெயர் மக்கள் மத்தியிலும் இந்த விடயத்தில் ஒரு ஒற்றுமையைக் காண முடியவில்லை. ஆனால் இம்முறை இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் ஒரு ஒற்றுமை ஏற்பட்டிருப்பதாக தெரியவருகிறது. காரணம் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து ஒரு கடிதத்தையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பியிருந்தன. இந்த நிலையில் தற்போது கூட இலங்கையின் தமிழ் கட்சிகள் மத்தியில் இந்த விடயத்தில் ஒரு இணக்கப்பாடற்ற நிலைமை இருப்பதை  காணமுடிகின்றது.

இந்த சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். தமிழ் கட்சிகள் தமிழ் பேசும் கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில்  கூட்டாக செயல்பட வேண்டும். அப்போதுதான் அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகித்து நீதியை பெற்றுக் கொள்ள முடியும். அதேபோறு புலம்பெயர் மக்களும் யதார்த்த நிலையை சிந்தித்து செயல்படுவது மிகவும் அவசியமாகும். மனித உரிமை பேரவைக்கு எவ்வாறான ஆணை காணப்படுகிறது அதன் எல்லை என்ன என்பது தொடர்பாக புரிந்துகொள்வது முக்கியமாகும்.

காரணம் ஐக்கிய நாடுகள் சபையினால் எந்த ஒரு நாட்டுக்கும் தண்டனை விதிக்க முடியாது என்று இலங்கையின் பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். எனவே எவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொள்ள முடியும் என்பது தொடர்பான வழிமுறையை ஆராய்ந்து இம்முறை கூட்டத்தொடரை ஒரு பயன்மிக்கதாக கொண்டுவரவேண்டும். மாறாக வழமைபோன்று நடைபெறும் மற்றுமொரு ஜெனிவாக் கூட்டத் தொடராக இருந்துவிடக்கூடாது. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49