(எம்.மனோசித்ரா)
அரச தலைவர் நேரடியாக மக்களிடம் சென்று அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து தீர்வை வழங்குவதால், தமக்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்று எதிர்தரப்பினர் அஞ்சுகின்றனர். அதனால் தான் 'கிராமத்துடன் உரையாடல்' வேலைத்திட்டம் தொடர்பில் மக்கள் மத்தியில் போலியான பிரசாங்கள் முன்னெடுக்கப்படுகின்றதென  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்திற்கமை நேற்று சனிக்கிழமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கருவெலகஸ்வௌ பிரதேசத்திற்கு சென்று, அங்குள்ள மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 'கிராமத்துடன் உரையாடல்' வேலைத்திட்டம் தொடர்பில் எதிர்தரப்பினரால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அரச தலைவரொருவர் மக்களை நேரடியாகச் சென்று அவர்களது குறைகளை கேட்டறிந்து அவற்றுக்கு தீர்வினை வழங்குவதால், அவர்களுக்கான வாய்ப்புக்கள் இல்லாமல் போய்விடும் என எதிர்தரப்பினர் அஞ்சுகின்றனர்.

அவர்கள் இவ்வாறு அஞ்சும் போதும் இந்த வேலைத்திட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். இதன் போது நான் கூறும் விடயங்கள் பலராலும் தவறாக திரிபுபடுத்தப்படுகின்றன. நான் செல்கின்ற அனைத்து இடங்களிலும் காணிகள் தொடர்பில் காணப்படுகின்ற பிரச்சினை பிரதானமாகக் காணப்பட்டது. பாரம்பரிய இடங்களில் வெவ்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கான ஆலோசனைகளும் உரியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மாறாக காடுகளை அழிப்பதற்கு யாருக்கும் அனுமதியளிக்கப்படவில்லை. மரத்தில் ஒரு கிளை வெட்டப்பட்டாலும் உரிய அதிகாரிகள்  உடனடியாக அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.