( எம்.மனோசித்ரா )

சீனாவின் அரசியல் கொள்கைகளையே ராஜபக்ஷ ஆட்சி பின்பற்றுகிறது. அதனால் தான் அரசியல் பழிவாங்கல் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூலம் எதிர்தரப்பினரின் குடியுரிமையை நீக்கி குடும்ப ஆட்சியை நிறுவ முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது  என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவின் அறிக்கையானது நீதிமன்ற செயற்பாடுகளை சவாலுக்குட்படுத்துவதாகவே அமைந்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகளின் காரணமாகவே ஜெனிவாவில் இலங்கைக்கு நெருக்கடிகள் அதிகரித்துள்ளதாகவும் நளின் பண்டார சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

தற்போதுள்ள அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கைகளை பார்க்கும் போது எந்த விடயத்தையும் உறுதியாகக் கூற முடியாது. இந்தியாவுடன் பாரிய முரண்பாடுகளுடனேயே அரசாங்கம் செயற்படுகிறது. இலங்கையில் சீனாவின் வேலைத்திட்டங்களை இந்தியா ஒருபோதும் விரும்பாது.

ஏற்கனவே கிழக்கு முனைய விவகாரத்தில் இந்தியாவுடன் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இவ்வாறான முறையற்ற வெளிநாட்டு கொள்கையால் அநாவசிய சர்வதேச தலையீட்டுக்கு அரசாங்கம் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது.

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை கிடைத்தவுடன் பல உண்மைகள் வெளிப்படுத்தப்படும். தமது தேவைகளுக்கு ஏற்ற வகையில் தற்போது அரசாங்கம் அந்த அறிக்கையை மீள தயாரித்துக் கொண்டிருக்கிறது. எனவே தான் அதனை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்படுகிறது.

அடுத்த ஜனாதிபதி பதவிக்காக ராஜபக்ஷாக்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படும். மஹிந்த தரப்பினர் , பசில் தரப்பினர் என இருபிரிவுகள் இப்போதிருந்தே செயற்பட ஆரம்பித்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனித்து விடப்பட்டுள்ளதைப் போன்று தென்படுகிறது.

சீனாவின் அரசியல் கொள்கைகளையே ராஜபக்ஷ ஆட்சி பின்பற்றுகிறது. அதனால் தான் அரசியல் பழிவாங்கல் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூலம் எதிர்தரப்பினரின் குடியுரிமையை நீக்கி குடும்ப ஆட்சியை நிறுவ முயற்சிக்கப்படுகிறது. சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி மாத்திரம் காணப்படுவதைப் போன்று இலங்கையிலும் ராஜபக்ஷ குடும்ப கட்சியை ஸ்திரமாக்கவே இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு தொடர்பில் சகல கட்சிகளுடனும் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இந்த ஆணைக்குழுவின் அறிக்கையானது நீதிமன்ற செயற்பாடுகளை சவாலுக்குட்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளின் காரணமாகவே ஜெனிவாவில் இலங்கைக்கு நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. அரசாங்கம் தவறான பாதையிலேயே சென்று கொண்டிருக்கிறது. அதனை திருத்தி சரியான பாதையில் பயணிக்கச் செய்வதற்கு உதவ ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி இலங்கையில் அதன் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிப்பதற்கான வாய்ப்பை இரட்டை குடியுரிமை விவகாரத்தின் மூலம் அரசாங்கமே ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அந்த கட்சியின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுவதென்பது இரண்டாம் பட்சமானதாகும். ஆனால் இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்திற்கு இடமளித்துள்ளமையே இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பிரதான காரணியாகும் என்றார்.