செவ்வாயில் நாசா விண்கலம் தரையிறங்க முக்கிய பங்கு வகித்த பெண் விஞ்ஞானி

By Digital Desk 2

20 Feb, 2021 | 01:26 PM
image

இந்தியாவில் பிறந்த பெண் விஞ்ஞானி சுவாதி மோகன் நாசாவின் ‘பெர்சிவரன்ஸ்’ ரோவர் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான  நாசா, செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய ‘பெர்சிவரன்ஸ்’ விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கியது.

வரலாற்று சிறப்புமிக்க ஆய்வில் இந்தியாவில் பிறந்த நாசா விஞ்ஞானியான சுவாதி மோகனுக்கு மிகப் பெரிய பங்கிருப்பது தெரிய வந்துள்ளது.

 ‘பெர்சிவரன்ஸ்’ விண்கலத்தை செவ்வாய்க் கிரகத்தில் நிலைப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்தி தரையிறக்குதல் ஆகிய பணிகள் இவரது கண்காணிப்பில் நடைபெற்றன.

கடந்த 2013  ஆம் ஆண்டு ஆரம்பமாகிய இந்த திட்டத்தில் முதலில் இருந்தே சுவாதி மோகன் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த விண்கலத்தின் வழிகாட்டுதல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் பிரிவின் தலைவராக இருந்துள்ளார்.

ரோவர் வாகனம், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எவ்வாறு செயல்பட  வேண்டும் என்பதற்கான தொழில்நுட்பத்தை சுவாதி உருவாக்கியுள்ளார். 

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்த சுவாதி, ஒரு வயதாகும் போது அமெரிக்கா சென்றுள்ளார். மேலும், நாசாவின் சனி கிரகத்துக்கான பயணம், நிலவுக்கான பயண திட்டங்களிலும் இவர் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை செவ்வாய் கோளில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய நாசா விஞ்ஞானிகள் குழுவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பாராட்டு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right