(இராஜதுரை ஹஷான்)
இனங்களுக்கிடையில் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் உரிய பொறிமுறைகளை வகுக்க வேண்டும். புதிய அரசியலமைப்பில் நல்லிணக்கம் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்பதை உத்தேச புதிய அரசியலமைப்பு நிபுணர் குழுவிடம் தெரிவித்துள்ளதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.


ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை விவகாரத்தில் அரசாங்கம் சர்வதேச நாடுகளை  பகைத்துக் கொள்ளாமல் நாட்டின் இறையாண்மைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது, நாட்டில் அரசாங்கங்கள் காலத்திற்கு காலம் எவ்வாறு மாற்றமடைகிறதோ, அவ்வாறே இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமும் காலத்திற்கு காலம் மாற்றமடைகிறது. நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடைய வேண்டுமாயின் தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் அனைத்தும் தேசிய நல்லிணக்கம் குறித்து உரிய கவனம் செலுத்தியுள்ளன.

அத்தோடு, தேசிய நல்லிணக்கம் குறித்து தற்போது மாறுப்பட்ட பல கருத்துக்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. ஒரு தரப்பினரது வெறுக்கத்தக்க பேச்சுக்களும், நடத்தைகளும் இனங்களுக்கிடையில்  தற்போது முரண்பாட்டை  தோற்றுவித்து நல்லிணக்கத்தை சவாலுக்குட்படுத்தியுள்ளது என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

தேசிய நல்லிணக்கத்தை உறுதியாக செயற்படுத்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பின் ஊடாக சிறந்த பொறிமுறையினை வகுக்க வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். தேசிய நல்லிணக்கத்தை தவிர்த்து ஒருபோதும் முன்னேற முடியாது. சர்வதேசமும் இன நல்லிணக்கத்தையே அங்கிகரிக்கும் என்றார்.