“என் உள்ளத்தாலும் உணர்வாலும் வாழ்வு முழுமையும் மலையக மக்களின் உரிமைப் போராட்டங்களில் ஒன்றிவிட்ட என்னை, விண்வெளியில் வீசி எறிந்தாலும் என் உணர்வாலும் உறவாலும் மலையக மக்களையே வட்டமிடும் செயற்கைக் கோளாக மாறுவனே அல்லாமல் செயலிழந்து போகேன்…” 

மலையகத்தின் புகழ்பூத்த பெருமகன் ‘இளைஞர் தளபதி’ இர. சிவலிங்கம் அவர்களது 21 ஆவது நினைவுப் பேருரை இன்று சனிக்கிழமை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெறுகிறது. 

அதனைக் கெளரவிக்கும் முகமாக இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

1960 களில் ஏற்பட்ட மலையக சமூக எழுச்சியின் பிதாமகன் இர. சிவலிங்கம் : அவர் பற்றிய சில நினைவுகளும் ஞாபகார்த்தக் குழுவினரின் பணிகளும்

பேராசிரியர் தை. தனராஜ்

“என் உள்ளத்தாலும் உணர்வாலும் வாழ்வு முழுமையும் மலையக மக்களின் உரிமைப் போராட்டங்களில் ஒன்றிவிட்ட என்னை, விண்வெளியில் வீசி எறிந்தாலும் என் உணர்வாலும் உறவாலும் மலையக மக்களையே வட்டமிடும் செயற்கைக் கோளாக மாறுவனே அல்லாமல் செயலிழந்து போகேன்…” 

இர. சிவலிங்கம்

ஒரு நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக தமது உழைப்பாலும் உதிரத்தாலும் இந்த நாட்டில் வளம் கொழிக்க வைத்த ஒரு மக்கள் கூட்டத்தை நாடு சுதந்திரம் அடைந்த கையோடு சுதந்திரம் அற்றவர்களாக ஆக்கிய அவலம் இந்நாட்டில் நடந்தேறியது. 

அதைப் பற்றிய எவ்வித பிரக்ஞையும் இன்றி தொடர்ந்தும் உழைத்துக் கொண்டிருந்த மக்கள் 1960 களில் தலை நிமிர்ந்தனர். அவ்வேளை உடைப்பெடுத்த வெள்ளமாக மலையகமெங்கும் சீறிப் பாய்ந்த விடுதலை வேட்கையின் பிதாமகன் “சொல்லின் செல்வர்” இர. சிவலிங்கமே ஆவார் எனில் அது மிகையாகாது; அதுவே வரலாற்று உண்மையும் கூட. 

மலையகத்தில் பிறந்து ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் கல்விகற்று சென்னை கிறித்தவ கல்லூரியில் தமது முதுமாணிப் பட்டப்படிப்பை நிறைவு செய்துகொண்டு நாடு திரும்பிய சிவலிங்கம் தான் கற்ற ஹைலன்ஸ் கல்லூரியிலேயே ஆசிரியராக இணைந்து கொண்டார். இக்காலத்தில் திருச்செந்தூரன் அவர்களும் அவருடன் இணைந்தார். சிவாவும் செந்தூரனும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயற்பட்டனர் எனக் கூறுவதுண்டு. 

அவர்கள் இருவரும் தமது மாணவர்களுக்கு கல்வி மாத்திரமன்றி சமூக உணர்வையும் ஊட்டினர். அதன் விளைவாக மலையகம், மலையக மக்கள் என்னும் உணர்வு மலையகமெங்கும் குறிப்பாக இளைஞர் மத்தியில் பீறிட்டுக் கிளம்பியது. மலையகத் தோட்டங்களில் பாரதி மன்றம், வள்ளுவர் மன்றம் என மன்றங்கள் அமைக்கப்பட்டதும் அவற்றின் மூலம் கலை இலக்கியங்கள் வளரத் தொடங்கியதும் இக்காலத்தில்தான்.

சிவாவும் செந்தூரனும் இம்மன்றங்களின் விழாக்களில் கலந்து கொண்டதோடு மலையக இளைஞர்களின் உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்யும் வண்ணம் உரையாற்றினர். சிவாவின் வசீகரத் தோற்றம், அதீத சொல்லாட்சி, அனல் பறக்கும் பேச்சு, திராவிட அரசியல் செல்வாக்கில் வழிவந்த எதுகையும் மோனையும் துள்ளி விளையாடும் தமிழ் ஆகியவை மலையக இளைஞர்களை காந்தமாக ஆதர்ஷித்தன. தாம் போகாத இடமில்லை என்னும் அளவுக்கு இரட்டையர்கள் இருவரும் மலையகத்தில் மூலை முடுக்கெல்லாம் சென்று உரையாற்றினர். அவர்களது புகழ் மலையகமெங்கும் பரவியது. 

அவர்களது அர்ப்பணிப்பினாலும் அயராத உழைப்பினாலும் மலையகம் தலைநிமிரத் தொடங்கியது. “மலையகம், மலையக மக்கள்” என்னும் ஒரு புதிய பண்பாடு மலையகத்தில் முகிழ்த்தெழுந்தது. 

சிவா, செந்தூரனின் அயராத உழைப்பினால் 1965 இல் ஹைலன்ஸ் கல்லூரியிலிருந்து வரலாற்றில் முதல் தடவையாக மூன்று மாணவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகம் சென்றனர். இவ்வாண்டு சுமார் 650 மாணவர்கள்கள் மலையகத்திலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட வரலாற்று நிகழ்வுக்கான அடித்தளத்தை இட்டவர்கள் சிவாவும் செந்தூரனும் மட்டுமே.

எனினும் இந்த புத்தெழுச்சியும், வளர்ச்சியும் தொடரவில்லை. 1965 இல் சிவா ஓர் அரசியல் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியதைத் தொடர்ந்து தனது பதவியை இழந்தார். செந்தூரன் கண்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த பழிவாங்கலின் பின்னணியில் இருந்த சில மலையக அரசியல்வாதிகள் பற்றி மக்கள் அறிந்திருந்தனர். 

இக்காலகட்டத்தில் சிவா ஹட்டனில் ஓர் உயர்கல்வி நிலையத்தை ஆரம்பித்தார். பின்னர் கண்டிக்குப் புலம் பெயர்ந்து சிறிது காலத்தில் சட்டத்தரணியானார். காலம் மாறியது; 1970 இல் புதிய அரசாங்கம் பதவியேற்றதைத் தொடர்ந்து சிவா திரும்பவும் ஹைலன்ஸ் கல்லூரிக்கு வந்து சேர்ந்தார். சிறிது காலத்தில் நுவரெலியா கல்வித் திணைக்களத்தில் கல்வி அதிகாரியாகப் பதவியேற்றார். பின்னர் கல்வி அமைச்சில் இணைந்தார். அவரது முயற்சியினால் சில தோட்டப்பாடசாலைகள் அரசினால் பொறுப்பேற்கப்பட்டது. அத்துடன் மலையகப் பட்டதாரிகள் பதின்மூன்று பேருக்கு அரச பணியையும் பெற்றுக்கொடுத்தார்.

1983 ஜூலை கலவரத்தில் கடுமையாகப் பாதிப்படைந்த சிவா தனது குடும்பத்தினருடன் தமிழகத்துக்கு புலம்பெயர்ந்தார். அவருடன் திருச்செந்தூரன் குடும்பத்தினரும் புலம்பெயர்ந்தனர். தமிழகத்தில் தாயகம் திரும்பிய மலையக மக்கள் படும் இன்னல்களைக் கண்டு மனம் வெதும்பிய சிவா திரும்பவும் பொதுப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். எதிரொலி அமைப்பு, மலையக மறுவாழ்வு மன்றம், தாயகம் திரும்பியோர் தேசிய பேரவை, நீலகிரி மனித உரிமைகள் அமைப்பு முதலிய அமைப்புகளை நிறுவி அவற்றின் மூலம் தனது பணிகளை முன்னெடுத்தார். 

அவரது பணிகளால் கொதிப்படைந்த அதிகார வர்க்கத்தினர் பொய்க்குற்றம் சுமத்தி சிவாவை சிறையிலடைத்தனர். கையும் காலும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட நிலையில் நான்கு மாதங்கள் சிவா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 1997 இல் திரும்பவும் மலையகம் திரும்பிய சிவா சகலரையும் வியப்புக்குள்ளாக்கி இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்து செயற்படத் தொடங்கினார். ஆனால் வெகு சீக்கிரத்தில் நோய்வாய்ப்பட்டு தமிழகம் திரும்பிய சிவா 1999 இல் இயற்கை எய்தினார். 

ஆசிரியர், அதிபர், பேச்சாளர், இலக்கியவாதி, கட்டுரையாளர், கல்வி நிர்வாகி, சட்டத்தரணி, சமூகப் போராளி என்னும் பன்முக ஆளுமை கொண்ட சிவா மறைந்த செய்தி கேட்டு மலையகம் துடித்தது. கண்ணீர் விட்டு அழுதது. மலையகம் எங்கும் அஞ்சலிக் கூட்டங்கள் நிகழ்ந்தன. 

இர. சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு

சிவாவின் மறைவைத் தொடர்ந்து அவரது மாணவர்களும் நண்பர்களும் இணைந்து திரு.எம்.வாமதேவன் தலைமையில் ஞாபகார்த்தக் குழுவினை அமைத்தனர். குழுவின் சார்பாக முதலாவது நினைவஞ்சலிக் கூட்டம் கொழும்பில் நடைபெற்றதுடன் ஒரு நினைவஞ்சலி மலரும் வெளியிடப்பட்டது. எச்.எச்.விக்கிரமசிங்க, ஆர்.இராமலிங்கம் மற்றும் இக்கட்டுரையாளர் இணைந்து அம்மலரை உருவாக்கினர். 

தொடர்ந்து 2000 ஆம் ஆண்டு முதலாவது நினைவுப் பேருரை மலையகத்தின் முதலாவது பேராசிரியர் எம்.சின்னத்தம்பி அவர்களால் கொழும்பில் நிகழ்த்தப்பட்டது. அடுத்துவந்த நினைவுப் பேருரைகள் பேராசிரியர்கள் கருணாநிதி, சூரிய நாராயணன் மற்றும் மெளனகுரு ஆகியோரால் நடத்தப்பட்டன. ஆயினும் ஞாபகார்த்தக் குழுவின் தீர்மாத்துக்கிணங்க மலையகத்தின் இளம் கல்வியாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களுக்கு மேற்படி நினைவுப் பேருரைகளை நிகழ்த்தும் வாய்ப்பு தொடர்ந்து வழங்கப்படுகின்றது.

நினைவுப் பேருரைகள் மாத்திரமல்லாத ஞாபகார்த்தக்குழு இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டிகளை நிகழ்த்தியது. அதுமட்டுமல்லாது மலையகப் பரிசுக் கட்டுரைகள் (2000), சிவலிங்கம் சிந்தனைகள் (2002), மலையக சமகாலப் பிரச்சினைகள் (2003), இனத்துவ முரண்பாடுகளும் மலையக மக்களும் (2007) ஆகிய நூல்களும் வெளியிடப்பட்டன. அத்துடன் பதினெட்டு நினைவுப் பேருரைகளைத் தொகுத்து மலையகம் : பல்பக்கப் பார்வை (2017) என்னும் கனதியான நூலும் வெளியிடப்பட்டது. 

தவிரவும் கல்வி, இலக்கியம், நிர்வாகம் முதலான துறைகளில் சாதனை படைப்போரையும் ஞாபகார்த்தக் குழு கெளரவித்து வருகிறது. 

குன்றிலிருந்து கோட்டைக்கு…

இன்றைய நினைவுப் பேருரையை இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பொருளியலாளரான எம்.கேசவராஜா நிகழ்த்துகிறார். அத்துடன் விசேட நிகழ்வாக ஞாபகார்த்தக்குழு தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான எம்.வாமதேவனின் “குன்றிலிருந்து கோட்டைக்கு” என்னும் நினைவுப் பதிவு நூல் வெளியிடப்படுகிறது. மலையகத்தின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் வெளியீட்டுரை நிகழ்த்துவதோடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் உட்பட பலர் உரையாற்ற உள்ளனர். வாமதேவன் ஹைலன்ஸ் கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் சென்ற முதல் மூன்று மாணவர்களில் ஒருவர் என்பதும் சிவாவின் முதன்மை மாணாக்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

முடிவுரை

மலையகத்தின் தலைமகனான இர.சிவலிங்கத்தை நினைவுபடுத்தி கடந்த 21 வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் நினைவுப் பேருரைகளை தொடர்ச்சியாக நடத்திவருவது பற்றி ஞாபகார்த்தக்குழு பெருமையடைகிறது.

மேற்படி நினைவுப் பேருரைகள் மலையகம் தொடர்பான சமூகவியல் ஆய்வுகளுக்கு உசாத்துணைகளாக விளங்கக்கூடியவைகளாகும்.

எமது பணிகளுக்கு தொடர்ச்சியாக நிதி உதவி வழங்கி ஆதரவு தருகின்ற நல்லுள்ளங்களுக்கு நன்றிகூற நாம் கடமைப்பட்டுள்ளோம்.