உலக நலனுக்காக கொவிட் தடுப்பூசி எப்பகுதியிலும் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்யும் இந்தியாவின் அர்ப்பணிப்புக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையினருக்கு 2 இலட்சம் தடுப்பூசிகள் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுமென இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.

Image result for indian flag virakesari

இது உலக ஆரோக்கியம், அதேபோல பல்தரப்பு உறவுகள், ஐநா முறைமை மற்றும் இந்தியாவின் வகிபாகம் மிகவும் பாரியளவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணி ஆகியவற்றிற்கான இந்திய உறுதிப்பாட்டையும் மேலும் வலுவாக்குகின்றது.

பெப்ரவரி 18ஆம் திகதி முன்கூட்டியே திட்டமிடப்பட்டவகையில் நடைபெற்றிருந்த சந்திப்பொன்றில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கர் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் இதற்கான பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.

'வக்சின்மைத்திரி' (தடுப்பூசி நட்பு) திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பல மில்லியன் கணக்கான தடுப்பூசி மருந்துகள் 25க்கும் அதிகமான நாடுகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதே நேரம் இவற்றில் பெருமளவானவை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதற்கு மேலதிகமாக வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, கரீபியன், பசுபிக் உள்ளிட்ட உலகின் பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த 49 நாடுகள் வெகுவிரைவில் இந்தியாவிலிருந்து தடுப்பூசியினை பெறவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மிக முக்கியமான மருந்து பொருட்கள், சுவாசக் கருவிகள், பீபீஈ தொகுதிகள் போன்றவற்றினை 150க்கும் அதிகமான நாடுகளுக்கு வழங்கியிருப்பது மூலம் கொவிட் 19 காலப்பகுதியில் மிகவும் தனித்துவம் மிக்க தலைமைத்துவத்தினை இந்தியா வெளிக்காண்பித்தது. இதில் 80 நாடுகளுக்கு குறித்த பொருட்கள் நன்கொடையாகவே  வழங்கப்பட்டிருந்தன.

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் கொவிட் நோய்க்கு எதிராக ஒத்துழைப்புடன் செயலாற்றி வருகின்றன. இதுவரை இலங்கைக்கு 26 தொன்கள் நிறையுடைய மருத்துவ பொருட்கள் வழங்கப்பட்டதுடன் 500000 கொவிட் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

இந்த ஒத்துழைப்புக்கான மற்றொரு சாட்சியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனையில் உருவாக்கப்பட்ட கொவிட்19 சார்க் நிதியத்திற்கு பாரியளவில் நிதியினை ஒதுக்கீடு செய்த இரண்டாவது நாடாக  இலங்கை பதிவாகியுள்ளது .