(எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவத்தில், பிரதிவாதிகளான முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 கடற்படையினருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று தீர்மானித்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதே நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
இந்த கடத்தல், காணாமல் ஆக்கல் குறித்த வழக்கு விசாரணைகள் பிரதம நீதியரசரால் நியமிக்கப்ப்ட்ட மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்னத்தின் தலைமையின் கீழ் மேல் நீதிமன்ற நீதிபதிகளான அமல் ராஜகருணா, நவரத்ன மாரசிங்க ஆகியோர் உள்ளடங்கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
இந்த கடத்தல், காணாமல் ஆக்கிய விவகாரத்தில், கடற்படை சிறப்பு புலனாய்வு பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றியிருந்த லெப்டினன் கொமான்டர் சம்பத் முனசிங்க, கன்சைட் நிலத்தடி இரகசிய வதை முகாமின் பொறுப்பாளராக அப்போது இருந்த லெப்டினன் கொமாண்டர் தரத்தினை உடைய தற்போது கொமான்டராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சுமித் ரணசிங்க, கடற்படை புலனாய்வுப் பிரிவின் நலின் பிரசன்ன விக்ரமசூரிய,கித்சிரி மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவின் பணிப்பாளராகவும் கடற்படை ஊடகப் பேச்சாளராகவும் அப்போது பதவி வகித்த கொமாண்டர் டி.கே.பி. தஸநாயக்க, கடற்படை வீரர்களான கஸ்தூரிகே காமினி, அருணதுஷார மெண்டிஸ் மற்றும் நேவி சம்பத் எனும் லெப்.கொமாண்டர் ஹெட்டி ஆரச்சி,சஞ்ஜீவ பிரசாத் திலங்க சேனராத்ன, அண்னச்சி எனப்படும் உபுல் சமிந்த, ஹெட்டி ஹெந்தி, என்டன் பெர்ணான்டோ, சம்பத் ஜனக குமார, முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் ஒப் தெ ப்ளீட் வசந்த கரன்னாகொட ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டு, அவர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று இந்த வழக்கு சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ரில் விசாரணைக்கு வந்த போது, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மேன் முறையீட்டு நீதிமன்ரில் தாக்கல் செய்துள்ள ரிட் மனு தொடர்பில் விடயங்கள் முன் வைக்கப்பட்டன. இவ்வழக்கில் வசந்த கருணாகொட பிரதிவாதியாக பெயரிடப்பட்டமைக்கு எதிராக அவர் தாக்கல் செய்துள்ள ரிட் மனு மேன் முறையீட்டு நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. .
அம்மனு எதிர்வரும் 4 ஆம் திகதி பரிசீலிக்கப்படவுள்ளது. அந்த ரிட் மனுவின் தீர்ப்பு வரும் வரை, இந்த விவகாரத்தில் கரன்னாகொடவுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுப்பது சாத்தியமற்றது என்பதால் வழக்கானது ஜூலை 2 ஆம் திகதிவரை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டது.
கொழும்பு, கொட்டாஞ்சேனை, தெஹிவளை, வத்தளை மற்றும் கட்டுநாயக்க உள்ளிட்ட பல பிரதேசங்களில் பல்வேறு உத்திகளை கையாண்டு இந்த கடத்தல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.
குறிப்பாக தெஹிவளையில் 2008.09.17 அன்று பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்பவரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஸ்வரன் ராமலிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாணவர்களும் கடத்தப்பட்டிருந்தனர்.
இதனைவிட கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த கஸ்தூரி ஆரச்சிலாகே ஜோன் ரீட், அரிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்டாஞ்சேனையை சேர்ந்த அன்டனி கஸ்தூரி ஆராச்சி, திருகோணமலையை சேர்ந்த தியாகராஜா ஜெகன் உள்ளிட்டோரும் கடத்தப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கடத்தப்பட்ட அனைவரும் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள இரகசிய வதை முகாமான கன்சைட் எனும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையை குற்றப் புலனயவாளர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த விடயம் சர்வதேச அளவில் அவதானிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், முன்னாள் கடற்படை தளபதி வசந்த கருணாகொட உள்ளிட்ட 17 பேர் இந்த விவகாரத்தில் சந்தேக நபர்களாக சி.ஐ.டி. மன்றுக்கு அறிவித்துள்ளது.
அதில் முன்னாள் கடர்படை தளபதி வசந்த கருணாகொட உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் 667 குற்றச் சாட்டுக்களின் கீழ் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
அந்த குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவே மூவர் கொன்ட ட்ரயல் அட் பார் சிறப்பு நீதிமன்றம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் ஏற்கனவே 17 ஆவது சந்தேக நபரான உபுல் மூன்றாவது சந்தேக நபர் லக்ஷ்மன் உதயகுமார, 5 ஆவது சந்தேக நபர் தம்மிக தர்மதாஸ ஆகியோருக்கு நிபந்தனை மன்னிப்பளிக்க சட்ட மா அதிபர் தீர்மானித்து அவர்கள் மூவரும் அரச சாட்சியாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM