(செ.தேன்மொழி)

இலங்கையில் விபத்துகளினால் நாள் ஒன்றுக்கு 8-10 பேர் உயிரிழப்பதுடன் , 40 - 50 பேர் வரை காயமடைகின்றனர். இவ்வாறான விபத்துக்களை தவிர்ப்பதற்காக போக்குவரத்து தொடர்பில் கண்காணிப்பதற்காக பொலிஸரை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

வீதி விபத்துகள் காரணமாக நேற்று வியாழக்கிழமை 15 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுள் 8 பேர் நேற்று இடம்பெற்ற விபத்துகளில் உயிரிழந்துள்ளதுடன் எஞ்சிய 7 பேரும் இதற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துகளில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்தவர்களாவர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 8 பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளதுடன் , 6 பேர் பாதசாரதிகளாவர். எஞ்சிய ஒருவர் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார்.

அதனால் மோட்டார் சைக்கிள் , முச்சக்கர வண்டிகளில் செல்பவர்கள், சாரதிகள் , பாதசாரதிகள் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும்.

தற்போது விபத்துகளினால் நாள் ஒன்றுக்கு 8-10 பேர் வரை உயிரிழப்பதுடன் , 40-50 பேர் வரை காயமடைகின்றனர். அதனை தடுப்பதற்காக போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுப்படுத்தப்படவுள்ளனர்.  

பொலிஸார் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டாலும்  விபத்துகளை கட்டுப்படுத்திக் கொள்வதற்காக பொது மக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.