(மயூரன்)  

பாலியல் வல்லுறவு வழக்கின் போது பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியம் மட்டும்  போதுமானதென யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மேல் நீதிமன்றில் நேற்று புதன்கிழமை வாய் பேச முடியாத, காது கேட்க முடியாத பெண்ணை கடத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதன் போது கருத்துத்தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு பெண் தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டேன் என வெளியில் தெரியப்படுத்தினால் , அது அவர்களுக்கு மட்டும் பாதிப்பு இல்லை. அந்த பெண்ணின் குடும்பம் , உறவினர்கள் , நண்பர்கள் என பலர் பாதிப்பை எதிர் நோக்குவார்கள். அதனால் அவ்வாறான வழக்கில் பூதக்கண்ணாடி வைத்து பார்க்க முடியாது.

பாலியல் வல்லுறவு வழக்கின் போது பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியம் மட்டும்  போதுமானது. இத்தகைய குற்றங்கள் சாட்சியங்களோடு செய்யப்படுவதில்லை. எனவே பெண்ணின் சாட்சியத்தில் நீதிபதிக்கு திருப்தி இருக்குமாயின் பெண்ணின் சாட்சியம் போதுமானது.

பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் ,  குடும்பத்தினர் , உறவினர்கள் , நண்பர்கள் , சமூகத்தினரிடம் இருந்து ஒதுக்கப்படும் நிலை காணப்படும். 

சொந்த கணவனிடம் இருந்த அன்பு இழக்க நேரிடலாம். திருமணம் ஆகாத பெண் எனில் அவருக்கு மணமகனை தேடுவது கடினம். இவற்றை எல்லாம் மீறி , நீதிமன்றுக்கு சென்று நீதி கிடைக்குமா என்ற எண்ணத்தோடு வருவார்கள்.

பெண் தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டேன் என வெளியில் தெரியபப்டுத்தினால் , அது அவர்களுக்கு மட்டும் பாதிப்பு இல்லை. அந்த பெண்ணின் குடும்பம் , உறவினர்கள் , நண்பர்கள் என பலர் பாதிப்பை எதிர் நோக்குவார்கள். 

இப்படியான நிலைகளை எல்லாம் மீறி தனக்கு நீதி வேண்டும் என நீதிமன்றுக்கு வருபவரை பூதக் கண்ணாடி வைத்து பார்க்கக்கூடாது. அந்த பெண் நீதிமன்றில் தெரிவிக்கும் சாட்சியம் நீதிபதிக்கு திருப்தியாக இருக்குமாயின் , அந்த பெண்ணின் சாட்சியம் மாத்திரம் போதுமானது என அவர் தெரிவித்தார்.