(இராஜதுரை ஹஷான்)

இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவது புதிய  அரசியலமைப்பில் தடை செய்யப்படும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பொதுஜன பெரமுன தலைமையிலான 10 பிரதான அரசியல் கூட்டணிக்கு வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கிறோம்.

புதிய அரசிலமைப்பு அனைத்து இன மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் முரண்பாடற்றதாக அமைய வேண்டியது அவசியமாகும் என நீர்வழங்கல் அமைச்சர் வாசு தேவ நாணயக்கார தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு விவகாரம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புதிய அரசியலமைப்பு அனைத்து இன மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைய வேண்டும். அவ்வாறு அமைந்தால் மாத்திரமே இனங்களுக்கிடையில் வரலாற்று ரீதியாக காணப்படும் முரண்பாடுகளுக்கான தீர்வை  முரண்பாடில்லாமல் பெற்றுக் கொள்ள முடியும். 

இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் அரசியலில் பங்கேற்பதற்கு அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் தடை விதிக்கப்பட்டது.

இத்தடை அரசியலமைப்பின் 20ஆவது திருத்ததில் நீக்கப்பட்டு இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் தேசிய தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கு ஆரம்பத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்தினோம்.

20 ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் தேசிய தேர்தல்களில் போட்டியிட வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு உத்தேச புதிய அரசியலமைப்பில் முழுமையாக இரத்து செய்யப்படும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பிரதான 10 அரசியல் கட்சிகளுக்கு வாக்குறுதி வழங்கினார்.

இதன் பின்னரே அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கினோம். புதிய அரசியலமைப்பு தொடர்பான நிபுணர் குழுவினரிடம்  அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 10 பிரதான அரசியல் கட்சிகளும் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் அரசியலில் பங்குப்பற்றவும், உயர் பதவிகளை வகிக்கவும் தடை விதிக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைக்கவுள்ளோம். பிவிதுறு ஹெல உறுமய கட்சியும் இந்த யோசனையை முன்வைத்துள்ளது.

புதிய அரசியலமைப்பில் அனைத்து இன மக்களின் அரசியல்  மற்றும் பொது அபிலாசைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இனப்பிரச்சினை தோற்றம் பெறுவதற்கு நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு பிரதான பங்கு வகிக்கிறது. ஆகவே வரலாற்று ரீதியாக தவறை இம்முறை திருத்திக் கொள்ள வேண்டும்.

தேர்தல் முறைமையில் முழுமையாக மாற்றம் ஏற்படுத்த வேண்டும். இவ்விடயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கு மத்தியிலும் ஒருமித்த தன்மையே காணப்படுகிறது. அரசியல் கட்சிகளுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்காத தேர்தல் முறைமையை புதிய அரசியலமைப்பின் ஊடாக அறிமுகம் செய்வது பிரதான அம்சமாக கருதப்படும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்குள் எழுந்துள்ள கருத்து முரண்பாடுகளுக்கு விரைவில் தீர்வை பெற்றுக் கொள்ளவேண்டும். ஆளும் தரப்பிற்குள் எழுந்துள்ள முரண்பாட்டை எதிர் தரப்பினர் அரசியல் பிரசாரத்துக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் ஒன்றிணைத்து எதிர்வரும் 25 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கட்சி தலைவர் கூட்டம் இடம் பெறவுள்ளது.

கூட்டணியின் உள்ளக பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை ஊடாக மாத்திரமே தீர்வை பெற்றுக் கொள்ள முடியும். வாதப்பிரதிவாதங்கள் இரு தரப்பிற்கும் இடையில் தோற்றம் பெற்றால் அது கூட்டணியையும், அரசாங்கத்தையும் பலவீனப்படுத்தும். ஆகவே அனைத்து தரப்பினரும் கூட்டு பொறுப்புடன் செயற்படுவது அவசியமாகும் என்றார்.