இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உன்னாவில் 2 தலித் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகள் மூன்று பேர் மாட்டுக்குத் தீவனம் வாங்க நேற்று புதன்கிழமை மதியம் கடைவீதிக்குச் சென்றுள்ளனர்.

ஆனால் மாலைநேரம் ஆகியும் சிறுமிகள் வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களை பல இடங்களில் தேடியுள்ளனர்.

அப்போது, சிறுமிகள் மூன்று பேரும் தங்களது சொந்த வயலில் துணியால் ஒன்றாக கட்டப்பட்ட நிலையில், கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த மூன்று சிறுமிகளில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மற்றொரு சிறுமி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்துள்ளார். பின்னர் அவரை மீட்டு அருகில் உள்ள கான்பூர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். உயிரிழந்த 2 சிறுமிகள் உள்பட 3 பேரும் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், மீட்கப்பட்டனர்.

பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 3 சிறுமிகளும் 13,16,17 வயதுடையவர்கள் ஆவர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.