(நா.தனுஜா)

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் பாராளுமன்ற உரை அரசாங்கத்தினால் இறுதி நேரத்தில் இரத்துச்செய்யப்படுவதற்கு இந்தியாவின் அழுத்தமே பிரதான காரணமாக அமைந்திருக்கும் என்று மக்கள் விடுதலை முன்னணி சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இது பற்றி கருத்து வெளியிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க பின்வருமாறு கூறினார்,

இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே பாகிஸ்தான் பிரதமரின் பாராளுமன்ற உரை இறுதிநேரத்தில் இரத்துச்செய்யப்பட்டிருக்கிறது என்று கருதுகின்றோம். இதிலிருந்து அரசாங்கத்திற்கென ஒரு ஸ்திரமான கொள்கை அல்லது நிலைப்பாடு இல்லை என்பது வெளிப்படுகின்றது.

அதுமாத்திரமன்றி பாகிஸ்தான் என்பது பெரியதொரு நாடாகும். அதன் பிரதமர் இம்ரான்கான் சர்வதேச ரீதியில் மதிப்பைப் பெற்றவராக இருக்கின்றார். அவ்வாறிருக்கையில், அவரது பாராளுமன்ற உரையை இரத்துச்செய்வதென்பது இராஜதந்திர ரீதியில் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கின்ற மிகவும் முட்டாள் தனமான நகர்வாகவே இருக்கும்.

அத்தோடு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இம்ரான்கானின் பாராளுமன்ற உரை இரத்துச்செய்யப்படுவதாயின், அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் போது அந்த அச்சுறுத்தல் இல்லையா என்ற கேள்வி எழுகின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.