குமார் ­சு­குணா

1000 ரூபா நிச்சயம் கிடைக்கும்... கிடைக்கவேண்டும்... எப்போது கிடைக்கும்... கிடைக்குமா .. நாங்கள் தான் பெற்றுக்கொடுப்போம்... இல்லை நாங்கள் பெற்றுக்கொடுப்போம் என்ற வசனங்கள்... மழை நீரில்  கவிழும்  காகித கப்பல் போன்ற  தேர்தல் கால வாக்குறுதிகள்.... பல விவாதங்கள், பல மேடைகள், பல போராட்டங்கள் , அது அவ்வளவுதான் என்ற சலிப்பு.. இப்படி எத்தனையோ விடயங்களை  தாண்டி இன்று மீண்டும்  1000 ரூபாவுக்குள் வந்துவிட்டோம்...

1000 ரூபா கிடைத்துவிட்டது நாங்கள் பெற்றுக்கொடுத்துவிட்டோம் என்கிறார்கள்... ஆனால் கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சியில் ஆரவாரிக்க முடியவில்லை. பெற்றுவிட்டோம் என்று மார்தட்டிக்கொள்ளவும் முடியவில்லை...

2015 காலப்பகுதியில் தொடங்கிய பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1000 ரூபா  சம்பள போராட்டத்தில் 5 வருடங்கள் மாறி மாறி பல போராட்டங்கள் நடைபெற்றன. ஒவ்வொரு போராட்டத்தின் முடிவிலும் சம்பளம் இப்போது கிடைத்துவிடும், நாளை கிடைக்கும் என்றே இருந்தது. 

ஆனால், இதுவரை கிடைத்ததாக இல்லை. கடைசியாக கடந்தவாரம் ஒரு போராட்டம் நடைபெற்றது. முழு அடைப்பு போராட்டம் எப்படியும் 1000 கிடைத்துவிடும் என்ற எதிர்பார்பில்  மொத்த மலையகமும் அன்றைய நாள் தொழிலாளர்களுக்காக  முடங்கியது. 

அதற்கிணங்க  மீண்டும் சம்பள பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இறுதியாக தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1040 ரூபாவை வழங்க வேண்டும் என சம்பள நிர்ணய சபையில் வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கப்பட்டது.

மலையகத்தில் இதனை சிலர் கொண்டாட்டமாகவும் நடத்தினர். ஆனால் எல்லோராலும் இதன் உண்மைத்தன்மையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விமர்சனங்கள் எழுந்தன. உண்மையில் 1000 கிடைத்தால் மகிழ்ச்சிதான் மறுப்பதற்கு இல்லை. ஆனால், எவ்வாறான வரைமுறைகளோடு இந்த 1000 கிடைக்கின்றது என்ற தெளிவு இல்லாமல் இருக்கின்றது.

ஒரு நாளைக்கு 1000 ரூபா என்றால் 30 நாளுக்கு 30 ஆயிரம் ரூபா என்று நாம் நினைக்கலாம். ஆனால், மலையக பெருந்தோட்டத்தை பொருத்த வரையில் இந்த முறையில் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது . 

இப்போது பெறுகின்ற ஊதியத்துக்கே 18  கிலோ கொழுந்து ஒருநாளைக்கு கட்டாயம் எடுக்கவேண்டும் போன்ற எழுதப்பட்ட, எழுதப்படாத சட்டங்கள் உள்ளன. அங்குள்ள நிர்வாககிகள் கூறுவதை கேட்க மறுத்தால் ஒரு நாள் பேரை இழக்கும் நிலையும் உள்ளது. 

இந்நிலையில், 1000  ரூபா அதிகரித்தால் கம்பனிகள் சும்மா இருக்காது. அதற்கான உற்பத்தி திறனை, இலாபத்தினை, வினைத்திறனை பெற முயற்சிக்கும். இந்நிலையில், 13 நாட்கள் தான் வேலைத்தரப்படும் என்ற செய்தி ஒன்றும் பரவுகின்றது. 

அரசியல் இலாபத்துக்காக சிலர் பரப்புகின்றனரா?, உண்மையில் கம்பனிகள் 13 நாட்கள் தான் வேலை கொடுக்கப்போகின்றனரா? என்ற தெளிவு இன்னும் தெளிவாக தெரியவில்லை.  13  நாட்கள்தான் என்றால் அந்த சம்பளம் இப்போது வாங்கும் சம்பளத்தை விட மிக குறைவு.

2015 காலப்பகுதியில் தொடங்கிய 1000 ரூபா போராட்டம் 5 வருடங்கள் கடந்த பின்புதான் கிடைக்கப்போகின்றது. அன்றைய விலைவாசிகள், பொருளாதார சுமை  என்பனவற்றுக்கு ஏற்றால் போல அன்றைய காலப்பகுதியில் 1000 ரூபா போதுமானதாக இருந்திருக்கும். 

ஆனால் , இன்றைய காலகட்டத்திற்கு  இது போதுமானதா  என்பது கேள்விக்குரியே.

பணத்தின் பெறுமதி என்பது காலத்திற்கு ஏற்ப மாறும்போது  சில பணத்தொகைகள் தேவையற்றதாக  மாறிவிடுகிறது. உதாரணத்திற்கு ஒரு காலத்தில் 1 ரூபாவுக்கு பான் வாங்கியிருப்பார்கள். அந்த காலப்பகுதியில் 100 ரூபா ஏன் 50 ரூபா என்பதே பெரிய பணத்தொகையே. 

ஆனால்,  இன்று 1 ரூபாவில் என்ன வாங்க முடியும் . காலம் மாறிவிட்டது. இன்று  10 ரூபா  என்பது  அன்றைய காலத்து  1 ரூபா பண பெறுமதியாக மாறிப்போய்விட்டது. இப்படி இருக்கும் போது,  இந்த 1000 ரூபா என்பது  இன்றைய காலத்துக்கு போதுமானதா?

அதுவும் இந்த தொகை தங்களை தேயிலைக்கு உரமாக்கும் தொழிலாளர்களின் உழைப்புக்கு  போதுமானதா?  என்பது  கேள்விக்குறி என்ற போதிலும், இத்தொகை கிடைக்குமாயின் மகிழ்ச்சியே. 

ஏனெனில் இதனை விட குறைவான தொகையை இப்போது தினக்கூலியாக பெறுபவர்களுக்கு  கிடைக்கிறது. எனவே, 1000 ரூபா என்பது வரமாகத்தான் இருக்கும். ஆனால், இதனை கம்பனிகள் கொடுக்குமா? என்ற சந்தேகம்தான் இப்போது பெரிதாக உள்ளது.

இந்நிலையில், தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,  சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாவிட்டால் தோட்டங்களை அரசு மீள பெற்றுக்கொள்வதற்கான அதிகாரம் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே, முன்னாள் ஜனாதிபதிகளான பிரேமதாச மற்றும் சந்திரிக்கா காலத்தில் இது போன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆனால், இன்றைய காலகட்டத்தில்  கம்பனிகளை அரசாங்கத்தினால் மீள எடுத்து நடத்த முடியாது.

ஏனெனில், தோட்டங்கள் நட்டத்தில் இயங்கியதால்தான் அரசு , தனியார் கம்பனிகளிடம் கையளித்தது. இந்நிலையில் மீண்டும் அதனை மீள பெறுவது சாத்தியமற்றது. அத்தோடு அரசிடம் உள்ள தோட்டங்கள் பல இன்று காடுகளாகிவிட்டன. சிறு பயிர்ச்செய்கை போலவும் மாறிவிட்டன. இதனால்தான் இன்று கம்பனிகள் சொல்வதை கேட்க வேண்டிய நிலை உள்ளது.

அரசாங்கம் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாட்சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளது. சம்பள நிர்ணய சபையின் முடிவை மாற்ற முடியாது. கம்பனிகள் ஆட்சேபனை தெரிவிக்காவிடின் 14 நாட்களுக்குப்பிறகு அது வர்த்தமானி மூலம் சட்டமாகும். 

ஆட்சேபனை தெரிவித்தால் மீண்டும் பேச்சு நடக்கும். வர்த்தமானிபடுத்திய பின்னரும் கம்பனிகள் குறித்த சம்பளத்தை தராது விட்டால் தொழில் திணைக்களத்தில் முறையிட்டு அந்தத்தொகையை பெற முடியும். ஆனால், இவை நடைமுறையில் சாத்தியமானதா என்பது கேள்விக்குறி.

இந்நிலையில், நாளாந்த சம்பளத்தை மாத்திரமே சம்பள நிர்ணய சபையினால் தீர்மானிக்க முடியுமெனவும் வேலை நாட்களைத் தீர்மானிக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கூட்டு ஒப்பந்தம் இதுவரை இரத்து செய்யப்படவில்லை எனவும் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

தொழிலாளர்களுக்கு 13 நாட்கள்தான் வேலை வழங்கப்படும் என புரளி உலவுவதாகவும் கம்பனிக்காரர்கள் அவ்வாறு தெரிவிக்கவில்லை எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டார். 

அவ்வாறு 13 நாட்கள் மாத்திரம் கம்பனிகள் தொழில் வழங்குவதாக இருந்தால், 13 நாட்களுக்கு மாத்திரம் லீஸ் கட்டுமாறும், ஏனைய 13 நாட்களுக்கு தாம் பொறுப்பெடுத்து தோட்டத்தை நடத்துவதாகவும் செந்தில் தொண்டமான் கூறினார்.

ஆனால், இந்த 1000 ரூபா நிபந்தனைகள் இன்றி கிடைத்தால் வரவேற்போம். 

ஆனால், 1000 ரூபாவை கண்துடைப்பாக கொடுத்து விட்டு  5 ஆயிரம் ரூபாவுக்கான  உழைப்பு சுரண்டப்பட்டால் அல்லது வேலை நாட்களை குறைத்தால் அது கொச்சிக்காய் கொடுத்து மிளகு வாங்குவதை விட மோசமான கதையே..

13 நாட்களுக்கு தொழிலாளர்களுக்கு வேலை வழங்கி, குறிப்பிட்ட தொகையை வழங்க முடியும் என்று நினைத்தால், மீண்டும் பாரிய மக்கள் போராட்டத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.

எது எப்படியோ... இப்போது 1000 ரூபா மற்றும் 13 நாட்கள் வேலை என்பன தொடர்பில் எழுந்துள்ள வதந்திகள், சந்தேகங்கள் என்பனவற்றை தெளிவுப்படுத்தி  உரியவர்கள் இது தொடர்பில் முற்றுப்புள்ளி வைத்தால் நல்லது.