(எம்.மனோசித்ரா)
தனிமைப்படுத்தல் விதிகள் தொடர்பில் பொலிஸாரின்  கண்காணிப்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, சுய தனிமைப்படுத்தல் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமைக்காக இன்று வியாழக்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் இவ்வாறு 3,164 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் தனிமைப்படுத்தல் காலத்தில் வீடுகளிலிருந்து வெளியேறுவதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி சென்றால் அது சட்டத்துக்கு முரணான செயற்பாடாகக் கருதப்படும்.

எனவே இது தொடர்பில் விஷேட அவதானம் செலுத்துமாறு பொலிஸ் பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ அதிகாரிகள் அல்லது பொது சுகாதார பரிசோதகர்களின் அறிவித்தல் கிடைக்கும் வரை தனிமைப்படுத்தலை முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்துகின்றோம். அதற்கு முரணாக செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.