(ஆர்.யசி)
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட சாரா என்பவர் இந்தியாவில் உள்ளாரா என்பது குறித்து உறுதியான தகவல்கள் இன்னமும் கிடைக்கவில்லை. சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் சாராவும் உயிரிழந்திருப்பதாகவே நம்பப்படுகின்றது. எனினும் இவற்றை உறுதிப்படுத்த மரபணு பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். சாரா உயிருடன் இருப்பாரெனின் நிச்சயமாக அவர் கைது செய்யப்படுவார் எனவும் கூறினார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்டதாக கூறப்படும் சாரா இந்தியாவில் உள்ளாரா, இருப்பாரெனில் அவரை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையா என கேள்வி எழுப்பப்பட்ட வேளையில் அதற்கு பதில் தெரிவிக்கையில், அமைச்சர் இதனை கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட சாரா என்பவர் இந்தியாவிலுள்ளதாக கூறப்பட்ட போதிலும் இன்றுவரை அது உறுதிபடுத்தப்படவில்லை. சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் சாராவும் இருந்துள்ளார் என்றே புலனாய்வு தகவல்கள் கூறுகின்றது. எனவே அவர் அந்த தாக்குதலில் இறந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக மரபணு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எவ்வாறு இருப்பினும் அவர் இந்தியாவில் உள்ளாரா என தெரியவில்லை. இந்தியாவில் இருந்து மீண்டும் அவர் இலங்கைக்கு வந்துள்ளார் என்ற தகவலும் எமக்கு கிடைத்தது.

எனவே, நாம் இந்திய புலனாய்வுத்துறையுடனும், சர்வதேச பொலிஸாருடனும் இணைந்து இந்த விடயங்களை ஆராய்ந்து வருகின்றோம். இராஜதந்திர ரீதியிலும் இது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம். ஆனால் அவர் இந்தியாவில் உள்ளாரா என தெரியவில்லை. அவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்பது தெரிந்தால் மட்டுமே அவரை கைது செய்வது குறித்து நடவடிக்கை எடுக்க முடியும். எனவே அவர் உயிருடன் இருந்தால் அவரை நிச்சயமாக கைது செய்யும் நடவடிக்கைகளை  முன்னெடுப்போம் என்றார்.