பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தினூடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை வாசித்தல் மற்றும் பகிர்வதற்கு அவுஸ்திரேலிய பயனாளர்களுக்கு தடை விதித்துள்ளது.

தொழில்நுட்ப நிறுவனங்களின் செய்தி உள்ளடக்கத்திற்கு வெளியீட்டாளர்களுக்கு பணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தும் அரசாங்க திட்டங்கள் காரணமாக பேஸ்புக் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அவுஸ்திரேலிய அச்சு ஊடகங்கள் விளம்பர வருவாயில் பாரிய சரிவை சந்தித்துள்ள நிலையில், அவுஸ்திரேலிய அரசு சர்ச்சைக்குரிய சட்டமொன்றை முன்மொழிந்தது.

இந்த சட்டம் அமுல்படுத்தப்படுமாயின் கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் அவுஸ்திரேலியாவின் செய்தி உள்ளடக்கங்களை பயன்படுத்துவதற்காக உள்ளூர் செய்தி நிறுவனங்களுடன் தமது வருமானத்தை பகிர்ந்து கொள்ள நேரிடும்.

இதனால் கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பை தெரிவித்திருந்தன.

"முன்மொழியப்பட்ட சட்டம் எங்கள் தளத்திற்கும் செய்தி உள்ளடக்கத்தைப் பகிர்ந்துகொள்ள அதைப் பயன்படுத்தும் வெளியீட்டாளர்களுக்கும் இடையிலான உறவை அடிப்படையில் தவறாகப் புரிந்துகொள்கிறது பேஸ்புக் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் பாராளுமன்ற கீழ் சபையில் குறித்த சட்டமூலம் நேற்று நிறைவேற்றப்பட்டதாகவும் அவுஸ்திரேலிய அரசு கூறியுள்ளது.

இதனை தொடர்ந்து, அவுஸ்திரேலிய பயனாளர்கள் பிரவேசிக்க முடியாத வகையில் அனைத்து உள்ளூர் மற்றும் சர்வதேச செய்தி தளங்களை பேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு அவுஸ்திரேலிய அரசு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், நம்பகத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளது.