கொரோனா தொற்றினால் தற்போதுள்ள சுகாதார பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு மத்தியில் பாடசாலைகளில் வைபவங்களை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து கல்வி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

அதன்படி தற்போது நிலவும் சுகாதார பிரச்சினைக்கு பொறுப்புடன் முகம் கொடுத்தவாறு மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் பாடசாலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், மாணவர்களின் கல்வியில் தரமான விருத்தியை ஏற்படுத்துவதற்குரியதான விடயதானங்களுக்கு இணையான மற்றும் விடயதானம் சாராத நடவடிக்கைகள் தவிர்ந்த பேண்ட் வாத்திய இசைக்குழு நிகழ்வுகள், ஊர்வலங்கள் ஆகியவற்றினை இடைநிறுத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அனைத்து மாகாண, வலய, கோட்டக்கல்வி அதிகாரிகளுக்கும் பிரிவெனாதிபதிகள் மற்றும் அதிபர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகையானது 70% ஐத் தாண்டியுள்ளதென தகவல் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டிய அதேவேளை, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விடயம் சார்ந்த கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், சுகாதார மேம்பாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்துவதற்கு எதுவிதமான தடையும் இல்லையென்பதையும் சுட்டிக் காட்டினார்.  

பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்தி பல்வேறு நிகழ்வுகள் மற்றும் ஊர்வலங்கள் நடாத்தப்படுவதாக சில பாடசாலைகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைவாக, சுகாதார பாதுகாப்பு தொடர்பில் நாட்டில் நிலவும் சூழ்நிலையை கவனத்திற் கொண்டு கல்வி அமைச்சு மேற்படி தீர்மானத்தினை  மேற்கொண்டதெனவும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் சுட்டிக் காட்டினார்.