(எம்.மனோசித்ரா)

கொவிட் பரவல் அச்சுறுத்தல் அதிகம் காணப்படுகின்றமை இனங்காணப்பட்டுள்ளமையினாலேயே மேல் மாகாணத்தில் முதலில் தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய 17 ஆம் திகதிபுதன்கிழமை மேல்மாகாணத்தில் கொழும்பு , கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 56 350 பேருக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது என பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் பொது மக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பமானது. இது தொடர்பில் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில் ,

 கொவிட் பரவல் அச்சறுத்தல் அதிகம் காணப்படுகின்றமை இனங்காணப்பட்டுள்ளமையினாலேயே மேல் மாகாணத்தில் முதலில் தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதே போன்று ஏனைய மாகாணங்களிலும் அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படும் பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டு அடுத்த கட்டமாக தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்படும்.

தற்போது 60 வயதுக்கு அதிகமானோருக்கு தடுப்பூசி வழங்குவதை விட 30 - 60 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு முன்னுரிமையளித்து தடுப்பூசி வழங்குவதன் காரணமாக வைரஸ் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்பது இனங்காணப்பட்டுள்ளது. எனவே தான் குறித்த வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்படுகிறது.

அதற்கமைய இன்று புதன்கிழமை கொழும்பில் 27 018 பேருக்கும் , கம்பஹாவில் 17 622 பேருக்கும் , களுத்துறையில் 11 710 பேருக்கும் கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பில் கொலன்னாவை , மொரட்டுவை, கொத்தொட்டுவ, ஹங்வெல்ல உள்ளிட்ட மருத்துவ சுகாதார பிரிவுகளிலும் , களுத்துறையில் அகலவத்தை, பண்டாரகம, மத்துகம, பாணந்துறை, ஹொரணை, பேருவளை மற்றும் களுத்துறை ஆகிய மருத்துவ சுகாதார பிரிவுகளிலும் , கம்பஹாவில் கம்பஹா, அத்தனகல்ல, நீர்கொழும்பு, சீதுவ, மஹர, வத்தளை, பியகம, மினுவாங்கொடை, ராகம, ஜாஎல மற்றும் களனி ஆகிய மருத்துவ சுகாதார பிரிவுகளிலும் தடுப்பூசி ஏற்றும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முதற்கட்டமாக தடுப்பூசி வழங்கி 32 வாரங்களின் பின்னர் 70 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. ஆரம்பத்தில் 4 வாரங்களில் இரண்டாம் கட்டமாக தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்ட போதிலும் , தற்போது 10 வாரங்கள் என அந்த கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த காலப்பகுதிக்குள் இரண்டாம் கட்டத்திற்கு தேவையான தடுப்பூசிகளை எம்மால் நிச்சயம் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.

> --