(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள சவாலுக்கு முகங்கொடுப்பதில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில்  காணப்படும் ஒத்துழைப்பு எதிர்வரும் காலங்களிலும் தொடரும் என்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

May be an image of one or more people, people standing and indoor

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே புதன்கிழமை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவை கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்துக்கலந்துரையாடினார்.

இதன்போது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்குத் தனது பாராட்டையும் தெரிவித்தார்.

அத்தோடு கொவிட் - 19 தடுப்புமருந்து ஏற்றும் பணிகள் மிகவும் சுமுகமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையைப் பாராட்டிய இந்திய உயர்ஸ்தானிகர், இவ்விடயத்தில் இந்தியா முக்கிய பங்கொன்றை வகிக்கின்றமை தொடர்பில் தனது மகிழ்ச்சியையும் வெளியிட்டார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 500,000 தடுப்புமருந்துகள் இலங்கைக்கு வழங்கப்பட்டமையை நினைவுகூர்ந்த உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள சவாலுக்கு முகங்கொடுப்பதில் இருநாடுகளுக்கு இடையில் காணப்படும் ஒத்துழைப்பு எதிர்வரும் காலங்களிலும் தொடரும் என்று குறிப்பிட்டார்.

மேலும் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இருநாடுகளும் தமக்கிடையில் ஜனநாயகக் கோட்பாடுகளையும் பாரம்பரிய மரபுகளையும் தொடர்ச்சியாகப் பகிர்ந்துவரும் அதேவேளை, இலங்கை மக்களுக்கும் அவர்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கும் தம்மால் இயன்ற உதவிகளை வழங்குவது இந்தியாவிற்குப் பெருமையளிப்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் இச்சந்திப்பின் போது எடுத்துரைத்தார்.

இந்தியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட கொவிட் - 19 தடுப்புமருந்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிற்கு ஏற்றப்படுவதையும் இந்திய உயர்ஸ்தானிகர் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.