தமது வலையமைப்பின் மூலம் உலகத்தின் பல நாடுகளுக்கு மில்லியன் கணக்கான சிறுவர்களின் பாலியல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விநியோகித்து வந்த குற்றச்சாட்டில் இலங்கையர்கள் உட்பட 7 பேரை ஸ்பானிய சிவில் பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த வலையமைப்பினர் சுமார் 80 சிறுவர்களை பயன்படுத்தி இவ்வாறான பாலியல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளதாகவும் இதில் 29 சிறுவர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு சிவில் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

குறித்த வலையமைப்பின் தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த நபர்  13 வயதுக்கு குறைவான சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் ஏற்கனவே 8 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பெரும்பாலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பார்சிலோனாவில் இடம்பெறும் சிறுவர்களின் பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தியதாக எடுக்கப்பட்டுள்ளன.

குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் 2010 முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை, சிங்கப்பூர், தாய்லாந்து, செக்குடியரசு, கென்னியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.