(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 78 000 ஐ அண்மித்துள்ளது. இன்று புதன்கிழமை இரவு 9.30 மணி வரை 713 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 77 897 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 71 176 பேர் குணமடைந்துள்ளதோடு 5968 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை மரணங்களின் எண்ணிக்கையும் 400 ஐ கடந்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை 6 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதற்கமைய மரணங்களின் எண்ணிக்கை 409 ஆக உயர்வடைந்துள்ளது.

பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய ஆணொருவர் ஜனவரி 27 ஆம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலை இவரது மரணத்திற்கான காரணமாகும்.

வெலிஓயா பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய ஆணொருவர் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி மருத்துவமனையில் கடந்த 13 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா மற்றும் உடல் உறுப்புக்கள் சேதமடைந்தமையாகும்.

பிலியந்தல பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய ஆணொருவர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் பெப்ரவரி 11 ஆம் திகதி கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

கொச்சிக்கடை பிரதேசத்தை சேர்ந்த 77 வயதுடைய ஆணொருவர் கடந்த 9 ஆம் திகதி தீவர கொவிட் தொற்றால் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

அம்பலாங்கொடையை சேர்ந்த 65 வயதுடைய ஆணொருவர் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் கடந்த 15 ஆம் திகதி இரத்தம் நஞ்சானமை, கொவிட் நிமோனியா மற்றும் தீவிர சிறுநீரக தொற்று என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

நயினாமடு பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய ஆணொருவர் மாரவில ஆதார வைத்தியசாலையில் கடந்த 13 ஆம் திகதி கொவிட் நிமோனியா , தீவிர நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.