(எம்.எம்.சில்வெஸ்டர்)

மலையக மக்களின் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவு, மகளிர் நலத்திட்டம், இளைஞர் யுவதிகளுக்கான சுய தொழில் வாய்ப்பு, சுகாதாரநலன் போன்றவைகள் சட்ட ரீதியான முறையில் மலையக மக்களுக்கு காணி உறுதிப் பத்திரங்களை பெற்றுக்கொடுப்பதுபோன்ற பிரதான 5 காரணிகளை மேம்படுத்துவது மற்றும் செயற்படுத்துவதே, எமது பிரதான நோக்கமாகும் என பிரஜா சக்தி அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான பரத் அருள்சாமி வீரகேசரிக்குத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

'மலையக மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக எமது மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் எண்ணக்கருவில் 2005/2006 காலப்பகுதியில் பெருந்தோட்டத் துறை அமைச்சின் கீழ் உதயமானதே பிரஜா சக்தி அமைப்பாகும். 

சிறியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு மலையக மக்களில் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கான பல வேலைத்திட்டங்களை செயற்படுத்தியிருந்தது.

எனினும், ஆட்சி மாற்றத்தின்போது அமைச்சின் கீழ் இயங்கி வந்த பிரஜா சக்தி அமைப்பு இல்லாமல் செய்யப்பட்டது.  மலைய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட ஆறுமுகன் தொண்டாமனின் மகனான, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய  உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தனது அமைச்சின் ஊடாக இதனை மீண்டும் செயற்படுத்துவற்கு நடவடிக்கை எடுத்தார். 

இந்த திட்டத்தை நேர்த்தியாக நடத்தி செல்வதற்காக 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் திகதியன்று என்னை, பிரஜா சக்தி அமைப்பின் பணிப்பாளர் நாயகமாக நியமித்தார்.

பிரஜா சக்தி அமைப்பானது 9 மாவட்டங்களில் அதாவது நுவரெலியாவில் 15 நிலையங்களும்,  பதுளையில் 9 நிலையங்களும், கண்டியில் 6 நிலையங்களும், இரத்தினபுரியில் 5 நிலையங்களும், கேகாலையில் 3 நிலையங்களும், காலி, மாத்தறை, மொனறாகலை, குருணாகல் ஆகிய மாவட்டங்களில் தலா  1 நிலையங்களுமாக மொத்தம் 44 மத்திய நிலையங்களை கொண்டு இயங்கிவருகின்றது. 

இந்த 44 மத்திய நிலையங்களின் கீழ், 313 தோட்டங்களிலுள்ள (எஸ்டேட்) 1037 பிரிவுகளில் (டிவிஷன்) வாழ்ந்து வரும் மலையக மக்களுக்கு இது உதவி வருகின்றமை குறிப்பிட்டுக்கூற வேண்டிய விடயமாகும்.

மலையக மக்களின் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவு, மகளிர் நலத்திட்டம், இளைஞர் யுவதிகளுக்கான சுய தொழில் வாய்ப்பு, சுகாதாரநலன், சட்ட ரீதியான முறையில் மலையக மக்களுக்கு காணி உறுதிப் பத்திரங்களை பெற்றுக்கொடுப்பது போன்ற பிரதான 5 காரணிகளை மேம்படுத்துவது மற்றும் செயற்படுத்துவது போன்றவற்றை நோக்காகக்கொண்டே பிரஜா சக்தி அமைப்பு  உருவாக்கப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவை மலையக பகுதிகளில் வாழ்கின்ற மாணவர்களுக்கு பெற்றுக்கொடுத்து, அவர்களின் வாழ்க்கை முறைமையை மாற்றியமைக்க வேண்டும். 

இப்பகுதி மாணவர்கள் மத்தியில் தகவல் தொழில்நுட்ப அறிவு நகர்புற மாணவர்களைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. 

ஆகவே, அவர்களுக்கான கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவை அவர்களின் சிறு பராயத்திலேயே வழங்கி, வேகமாக செல்கின்ற உலகினருடன் ஓடுவதற்கு ஆயத்தம் செய்து கொள்ள வேண்டும்.

இளைஞர் யுவதிகளுக்கு  சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களை தையரியமான நம்பிக்கைமிகுந்தவர்களாக மாற்ற முடியும். 

சுயதொழில் வாய்ப்புக்கான  தொழிற்பயிற்சிகளை வழங்கி அவர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். உதாரணமாக, இளைஞர் ஒருவர் பற்றிக் ஆடைகளை தயாரிப்பவராக இருந்தால், அவருக்கான தொழிற்பயிற்சியை வழங்குவதுடன், அந்த ஆடைகளை விற்பனை செய்வதற்கான சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

இதன் மூலம் தோட்டங்களில்  வேலை செய்வதில் ஆர்வம் குன்றியுள்ள இளைஞர், யுவதிகள் தலைநகரில் குறைந்த சம்பளத்துடன் தொழில் செய்யவேண்டிய கட்டாயம் இருக்காது. இவ்வாறு சுயதொழில் வாய்ப்பை பெற்றுத் தருவதை இளம் சமுதாயத்தினர் பலரும் விரும்புகின்றனர். 

அத்துடன் குறுகிய சூழ்நிலையுடன் வாழ்ந்து பழக்கமான இளம் சமுதாயத்தினர் சிலர், தலைநகர் மற்றும் நகர் புறங்களில் வேலை செய்வதன் மூலம் தீய பழக்கங்களுக்கு உள்ளாவதை தவிர்க்க முடியும்.

தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதை நம்பி வாழும் பெண்களின் வாழ்க்கையை மாற்றியமைத்து, அவர்களையும் முன்னேற்றி செல்வதற்காக வழிவகைகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காக மகளிர்  மேம்பாடு தொடர்பிலும் நாம் அக்கறை செலுத்தியுள்ளோம்.

நாட்டின் ஏனைய பகுதிகளைக் காட்டிலும் மலையகப் பகுதிகளில் சுகாதாரம் மற்றும் போஷாக்கு விடயங்களில் பின்தங்கிய நிலைமையே காணப்படுகிறது. அதனை மாற்றியமைத்து அவர்களுக்கு சிறந்த சுகாதார நலன்களை பெற்றுக்கொடுப்பது முக்கியத் தேவையாகும்.

மேலும்இ, சட்ட ரீதியாக காணி  உறுதிப்பத்திரங்களை பெற்றுக்கொடுப்பதும் எமது பொறுப்புக்களில் ஒன்றாகும்.

எமது இந்த பிரஜா சக்தி அமைப்பின்  செயற்பாடானது, மலையக பகுதிகளில் மாத்திரமல்லாது, நாட்டின் வடக்கு, கிழக்கு ஆகிய பிரதேசங்களிலும் செயற்படுத்துவதற்கான திட்டங்களை முன்னெடுத்துவருகிறோம். 

தற்போதுள்ள 44 மத்திய நிலையங்களுக்கு மேலதிகமாக மேலும் 15 மத்திய நிலையங்களை வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களை உள்ளடக்கியவாறாக அமைக்கவுள்ளோம். 

இந்த திட்டத்தின் ஊடாக மக்கள் நன்மை அடைய வேண்டும். அவர்களுக்கு நாம் சேவை செய்ய வேண்டும் என்பது எமது தார்மீக பொறுப்பு' என்றார்.