(எம்.மனோசித்ரா)

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமைக்காக இன்று புதன்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அதற்கமைய இதுவரையில் 3,156 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 3,100 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எந்தவொரு பிரதேசத்தில் வசிப்பவரானாலும் வீட்டிலிருந்து வெளியேறும்போது முகக்கவசத்தை அணிவதை கட்டாயமாக்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தனிமைப்படுத்தல் விதிகள் பின்பற்றப்படுகின்றமை தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

எனவே, இவற்றில் தனிமைப்படுத்தல் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதற்கான சகல ஏற்பாடுகளையும் எந்த சந்தர்ப்பத்திலும் முன்னெடுக்குமாறு வலியுறுத்துகின்றோம். 

இது வரையில் இவற்றை பின்பற்றாத 1,400 நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.