(செ.தேன்மொழி)

'சுபீட்சமான எதிர்காலம் ' கொள்கைத்திட்டம் தயாரிக்கப்படும் போது, வைரஸ் தொற்று காரணமாக நாடு பாரிய சவால்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கப்படவில்லை. 

ஆனால், இன்று முழு உலகமுமே கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பாரிய சரிவுகளை சந்தித்துள்ளன. அதற்கமைய வைரஸ் தொற்றுக்கு மத்தியில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது எமது கடமையாகும் என்று ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை தேசிய அபிவிருத்திக்கான ஊடகநிலையத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது,

'சுபீட்சமான எதிர்காலம்' கொள்கைத்திட்டத்தை தயாரிக்கும்போது, நாடு வைரஸ் தொற்றினால் பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று எதிர்ப்பார்க்கப்படவில்லை. 

கொவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கை மட்டுமன்றி, பல உலக நாடுகள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றன.

இந்நிலையில் 194 நாடுகளில் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டுள்ளமை தொடர்பில் நாம் 10 ஆவது இடத்திலிருக்கின்றோம்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக செயற்பட்ட காலகட்டத்தில் உள்நாட்டு யுத்தம்,  சுனாமி பேரலையினால் ஏற்பட்ட அழிவுகள் மற்றும் எரிப்பொருள் விலை அதிகரிப்பு என்று பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டபோதும், உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடிந்தது. அதுமட்டுமன்றி, நாட்டில் அபிவிருத்தி செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டது. 

இந்நிலையில், வைரஸ் தொற்றின் காரணமாக சுற்றுலாத்துறை, அந்நிய செலவாணி மற்றும் ஆடை தொழிற்சாலை ஆகிவற்றின் ஊடாக கிடைக்கப் பெரும் வருமானத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றை நாம் நிவர்த்தி செயற்துக்கொள்ள முயற்சிக்கவேண்டும்.

அதனால், நாட்டின் தற்போதைய நிலைமைத் தொடர்பில் உலக நாடுகளுக்கு நாம் தெரியப்படுத்த வேண்டும்.  இதேவேளை, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதுடன், அபிவிருத்தி செயற்பாடுகளையும் முன்னெடுக்கவேண்டும்.

எமது இந்த செயற்பாடுகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்துவதற்காகவே இந்த தேசிய அபிவிருத்திக்கான ஊடகநிலையம் செயற்படுத்தப்படவுள்ளது என்றார்.

இதன்போது, ஊடக அமைச்சின் செயலாளர் ஜகத் பி. விஜேவீர,  தேசிய அபிவிருத்திக்கான ஊடகநிலையத்தின் பணிப்பாளர் மிலிந்த ராஜபக்ஷ  உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளும் கலந்துக் கொண்டிருந்தனர்.