(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தால் வழங்கப்படும் கொவிட் தடுப்பூசி எமக்கு தேவையில்லை. அதனை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கி அவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

இலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகள் , சலுகைகள் சீரழிக்கடுகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தின் தாட்பரியம் பற்றி அறியாதோர் அதைப்பற்றி முரண்பட்ட கருத்துக்களை கூறிக் கொண்டிருக்கிறார்கள். 

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வரவு - செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் , அரசாங்கம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை மாத்திரம் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.

இரு வாரங்களுக்கு முன்னர் கூடிய சம்பள நிர்ணய சபையில் எதிர்க்கட்சியாக இருந்த போதிலும், கம்பனிகளுக்கு எதிராக நாம் எமது வாக்குகளை வழங்கினோம். 

அதேபோன்று வெள்ளியன்றும் எமது வாக்குகளை கம்பனிகளுக்கு எதிராகவே வழங்குவோம். எனவே, ஜனவரி முதலாம் திகதி முதல் உள்ள நிலுவை தொகையுடன் சேர்த்து மார்ச் மாதம் முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

நிபந்தனையற்ற வழமை மாறாத சம்பள அதிகரிப்பையே நாம் வலியுறுத்துகின்றோம். இன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி வழங்க அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

எமக்கு கொரோனா தடுப்பூசி தேவையில்லை. அதனை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கி அவர்களின் சுகாதார நலனை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.