(செ.தேன்மொழி)

மியன்மாரின் செயற்பாடுகளைப் பின்பற்றியே இலங்கை அரசாங்கமும் செயற்பட்டு வருகின்றது. பேரணியொன்றை முன்னிலைப்படுத்தி வடகிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதுடன் , முஸ்லிம் அரசியல் தலைவர்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்காமலும் இருக்கின்றது.

அரசியல்பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகளை செய்வதாக குறிப்பிட்டு ஆணைக்குழுவை அமைத்து தென்பகுதி அரசியல் தலைவர்களையும் அடக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் பாதிப்படைந்துள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் , அரசியல் செயற்பாடுகளை விட்டு வெளியேறுவார்களாயின் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகள் உருவாகுவதற்கே அது வாய்ப்பளிக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

முன்னால் நீதியரசர் உபாலி அபேவர்தனவின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை ஜனாதிபதிக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த அறிக்கையில் சிலரது பிரஜாவுரிமை நீக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  இந்நிலையில் அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் எதிர்கட்சியினர் என்ற வகையில் அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அதனால் கடந்த மாதம் 28 ஆம் திகதி அந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பிக்குமாறு  சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தோம். எனினும் இதுவரையில் சமர்பிக்கப்பட வில்லை.

இந்நிலையில் , அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டியது நாட்டின் ஜனாதிபதியின் கடமையாகும். இதேவேளை அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தண்டனை வழங்குவது நியாயமானது என்றாலும் , அதற்கான விசாரணைகள் நீதிமன்றம் ஊடாகவே இடம்பெறவேண்டும். நீதிமன்ற செயற்பாடுகளுக்கு மத்தியில் ஆணைக்குழுக்களை அமைத்து இவ்வாறான விசாரணைகளை மேற்கொள்வது சிறந்த செயற்பாடாக அமையாது.

நல்லாட்சி அரசாங்கத்திலும் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆணைக்குழு அமைத்து விசாரணைகளை நடத்துவது தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டது.  ஆனால் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். நாட்டில் நீதிமன்ற செயற்பாடுகள் காணப்படும் போது , இவ்வாறான ஆணைக்குழுக்களை அமைப்பது சிறந்ததாக அமையாது என்று அவர்கள் அதனை தவிர்த்தனர். ஆனால் தற்போதைய அரசாங்கம் மாறுப்பட்ட கோணத்திலேயே செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஊடாக அரசியல் உரிமைகளிலும் தலையீடு செலுத்த முயற்சிக்கின்றனர்.

ஜனாதிபதி ஆணைக்குழுவை பயன்படுத்தி தென்பகுதி அரசியல் தலைவர்களை அடக்க முயற்சிக்கும் அரசாங்கம், தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் எண்ணங்களுக்கு செவிசாய்க்கமல் அவர்களுக்கு எதிராக செயற்படுவதன் மூலம் அவர்களையும் அடக்கிவைக்க முயற்சிக்கின்றது. பாராளுமன்ற உரையாடல்களின் போது தமிழ் , முஸ்லிம் உறுப்பினர்களின் கருத்துகளை தெரிவிப்பதற்கு ஆளும் தரப்பினர் இடமளிப்பதில்லை. இத்தகைய செயற்பாடுகள் காரணமாக இவர்கள் பாராளுமன்றத்தை விட்டு வெளியில் சென்றால் , பயங்கரவாதிகளுடனே இணைந்துக் கொள்வார்கள்.

ஆரம்ப காலங்களில் இருந்த அரசாங்கங்களின் செயற்பாடுகளின் காரணமாக 30 வருடகால யுத்தத்திற்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை எமக்கு ஏற்பட்டிருந்தது. இந்த நிலைமை மீண்டும் ஏற்படக்கூடாது. இதேவேளை ,அரசாங்கத்தின் போக்கானது மியன்மார் நாட்டின் செயற்பாடுகளைப் போன்றே அமையப் பெற்றுள்ளது.