உலகளவில் மில்லியன் கணக்கிலான மக்கள் தவறான உணவு பழக்கத்தாலும், மது அருந்துவதாலும் அவர்களின் கல்லீரல் கொழுப்பு செறிந்த கல்லீரல்  பாதிப்பிற்கும், liver cirrhosis எனப்படும் கல்லீரல் சுருக்க பாதிப்பிற்கும் ஆளாகிறார்கள். இதனைத் துல்லியமாக அவதானிக்க தற்போது நவீன பரிசோதனை கண்டறியப்பட்டுள்ளது.

எம்மில் யாருக்கேனும் அடி வயிற்றின் வலதுபுற மேற்பகுதியில் வலி ஏற்பட்டாலோ அல்லது திடீரென்று எடை குறைவு, சோர்வு, தோலின் நிறம் மாற்றம், அடிவயிறு வீக்கம், கால்கள் வீக்கம், குழப்பம் .. போன்றவை ஏற்பட்டால் அவை கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டதன் அறிகுறியாக எடுத்துக்கொண்டு உடனடியாக மருத்துவரை சந்தித்து முறையான பரிசோதனை மூலம் பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மது அருந்துவது, உடற்பருமன், கட்டுப்பாடற்ற ரத்த சர்க்கரை, அதிக அளவு கொலஸ்ட்ரால், இன்சுலின் பற்றாக்குறை... போன்றவற்றின் காரணமாக கல்லீரலில் கொழுப்பு அதிகமாகவும், கல்லீரல் சுருக்க பாதிப்பும் ஏற்படும்.

இவர்களுக்கு இரத்த பரிசோதனையை முதலில் மேற்கொள்வார்கள். அதன்போது ALT எனப்படும் Alanine Aminotransferase Test என்ற  பரிசோதனையும், AST எனப்படும் Aspartate Aminotransferase Test என்ற பரிசோதனையும் மேற்கொள்வார்கள். தொடர்ந்து அல்ட்ரா சவுண்ட், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்வார்கள். ஒரு சிலருக்கு கல்லீரல் திசு பரிசோதனை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்துவார்கள்.

இத்தகைய பரிசோதனையின் மூலம் கொழுப்பு செறிந்த கல்லீரல் பாதிப்பு எதனால் ஏற்பட்டது? என்பதை கண்டறிவார்கள். இந்நிலையில் தற்போது Nuclear Magnetic Resonance எனப்படும் அணுவின் உதவியுடன் கூடிய காந்த ஆற்றல் அல்லது அதிர்வின் மூலம் கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை துல்லியமாக கண்டறிய இயலும். இதன் மூலம் கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சையின் மூலம் குணப்படுத்தலாம் என்று கண்டறியப்பட்டிருக்கிறது.

டொக்டர் மகேஷ் சுந்தரம்.

தொகுப்பு அனுஷா.