
சவூதி அரேபியா, மக்காவை தலைமையகமாகக் கொண்டியங்கும் உலக முஸ்லிம் லீக் (ராபிதா அல் ஆலம் அல் இஸ்லாமி) அமைப்பு ஏற்பாடு செய்துள்ள சர்வதேச இஸ்லாமிய மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. அலரி மாளிகையில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள பிரதான நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.
'முஸ்லிம்களும் சகவாழ்வுக்கான வாய்ப்பும்' எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில் தாய்லாந்து, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், இந்தியா, தாய்வான், நேபாளம், பாகிஸ்தான், கம்போடியா, மியன்மார், சீனா, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஏராளமான பேராளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
சகவாழ்வை ஏற்படுத்தி உலக சமாதானத்தை நிலைநாட்டுவதனை அடிப்படையாகக் கொண்ட குறித்த மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட கல்விமான்கள் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கவுள்ளனர். இன்றும் நாளையும் நடைபெறவுள்ள இம்மாநாட்டுக்கான பணிகளை இலங்கை இஸ்லாமிய நிலையம் மேற்கொண்டு வருகிறது. மேலும் ஆரம்ப நிகழ்வு தவிர்ந்த ஏனைய நிகழ்வுகள் விளையாட்டமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.