சம்பள நிர்ணய சபை அறிவித்துள்ள ஆயிரம் ரூபா சம்பள உயர்வு எவ்வகையிலும் தொழிலாளர்களின் உரிமைகளையும் சலுகைகளையும் பாதிப்பதாக அமைந்து விடக் கூடாது என்பதுவே எமது எதிர்பார்ப்பாகும் என அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வாக்கெடுப்பின் போது  எதிராக வாக்களித்த கம்பெனிகள் இனிவரும் காலங்களில் தொழிலாளர்கள் நலன் சார்ந்த விடயங்களில் எவ்வாறு நடந்துகொள்ள போகின்றன என்பது தெளிவுபடுத்தப்படாத சர்ச்சையான கருத்தாகவே நிலவுகின்றது.

இதன் மூலம் கூட்டு ஒப்பந்தம்  வலுவிழக்கப்படுமாயின் அதனை நிவர்த்தி செய்வதற்கு ஏற்ப எம்மிடம் என்ன மாற்றுத் திட்டங்கள் உள்ளன என்பதனை நாம் இப்போது பேசி தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.

சம்பள உயர்வு கிடைத்து ஏனைய  உரிமைகள் மறுக்கப்படுவதையோ அல்லது ஏனைய சலுகைகள் கிடைத்து சம்பள உயர்வு மறுக்கப்படுவதையோ நாம் முழுமையான வெற்றியாக கருத முடியாது பதிமூன்று நாட்கள் வேலை என்ற கருத்து வதந்தியாக அல்லாமல் அதை ஏதாவது வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் அதனை எவ்வாறு முகம் கொடுப்பது என்பது  பற்றியும் இதன்மூலம் தொழிலாளர்கள் வேலை நாட்களில் இழக்கப்பட்டால் அதற்கான மாற்று ஏற்பாடுகள் என்ன என்பது பற்றியும் சம்பள நிர்ணய சபையின் முடிவு படி ஆயிரம் ரூபா வழங்கி கூட்டு ஒப்பந்தத்தை காலாவதியாக்கும் நிலை ஏற்பட்டால் அதற்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது பற்றியும் முடிவெடுப்பதில் தாமதம் காட்டாமல் மலையக தொழிலாளர்களின் நலனில் அக்கறையுள்ள அனைத்து சக்திகளும் இணைந்து உறுதியான நிலைப்பாட்டுக்கு வர வேண்டும்.

வெள்ளம் வரும் முன்னரே அணை கட்ட வேண்டும் என்பது போல ஏதாவது சிக்கல்கள் ஏற்படுவதற்கு முன்னரே நாம் மாற்ற திட்டங்களுடன் தயாராக இருப்பதே நன்மை தரும் தொழிலாளர்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்பது பற்றிய புள்ளி விபரங்களுடன் வெளிவரும் தகவல்களையும் நாம் முழுமையாக உதாசீனப்படுத்தாமல் இவ்விடயத்தினை சர்ச்சைக்குள்ளாக்கும் போக்கில்  ஈடுபடாமல் இணைந்த செயற்பாட்டில் அனைவரும் ஆர்வம் செலுத்துவோம் எனவும் தெரிவித்தார்.