இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்வம் தொடர்பாக தெரியவந்துள்ளதாவது,

மத்திய பிரதேச மாநிலத்தில் சிதி என்ற இடத்தில் இருந்து சாட்னா என்ற இடத்திற்கு 54 பயணிகளுடன் பஸ் ஒன்று சென்றுள்ளது. இந்த பஸ் பாட்னா கிராமம் அருகே சென்ற போது அங்குள்ள கால்வாய் ஒன்றில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.

காலை வேளையில் இடம் பெற்ற இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 32 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன.  

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 5 இலட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என இந்திய மத்திய பிரதேச மாநில முதல் மந்திரி அறிவித்துள்ளார்.