அட்டன் பகுதியிலுள்ள பிரதான பாடசாலையில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அப்பாடசாலை இன்று (16.02.2021) முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பாடசாலை முழுவதும் தொற்றுநீக்கி தெளித்து, தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்காகவே பாடசாலை இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த ஆசிரியைக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அவர் அண்மையில் பாடசாலைக்கும் சென்றுள்ளார். தரம் 6 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இப்பாடசாலையில் அதிபர் உட்பட 40 ஆசிரியர்கள் கடமையாற்றுவதுடன் சுமார் ஆயிரம் மாணவர்கள் வரை கல்வி கற்கின்றனர்.