இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியானது தற்சமயம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியானது 227 ஓட்டங்களினால் வெற்றி பெற்றிருந்தது.

இந் நிலையில் தொடரின் இரண்டாவது போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமானது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது தனது முதல் இன்னிங்சுக்காக 329 ஓட்டங்களை குவித்தது.

இந்த இன்னிங்ஸில் ரோகித் சர்மா அதிகபடியாக 161 ஓட்டங்களை குவித்தார்.

அதன் பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியானது 134 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இதனால் 195 ஓட்ட முன்னிலையுடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் அஸ்வினின் சத உதவியுடன் 286 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அதனால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 482 ஓட்டங்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

482 என்ற வெற்றியிலக்கை பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில் வெறும் 19 ஓவர்களை மாத்திரமே எதிர்கொண்டு மூன்று விக்கெட்டுகளை இழந்து 53 ஓட்டங்களை பெற மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

இந் நிலையில் நான்காம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பிக்க இங்கிலாந்து அணி வீரர்களின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தது. 

அதனால் இறுதியாக 54.2 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 317 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது இங்கிலாந்து.

இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி சார்பில் மொய்ன் அலி மாத்திரம் அதிகபடியாக 43 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் அக்ஸர் படேல் 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் பாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இதனால் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.