(செ.தேன்மொழி)

தங்கொட்டுவ மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் தனிப்பட்ட முரண்பாடுகளின் காரணமாக பெண்ணொருவர் உட்பட இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தங்கொட்டுவ - எடியாவல பகுதியில் நேற்று பிற்பகல் மாமனார் மற்றும் மருமகனுக்கு இடையில் ஏற்பட்ட குடும்ப பிரச்சினையின் காரணமாக, மருமகன் அவரது மாமனாரை கற்களை கொண்டு தாக்கிய நிலையில்  உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, படுகாயமடைந்த நபர் தங்கொட்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

மேற்படி பகுதியைச்  சேர்ந்த 65 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் மருமகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை , அநுராதபுரம் பரசன்கஸ்வௌ பகுதியில் நேற்று இரவு தனிப்பட்ட முரண்பாட்டின் காரணமாக , பெண்ணொருவருக்கும் பிரிதொரு நபருக்குமிடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது, குறித்த நபர் பெண்ணை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். சம்பவத்தின் போது படுகாமடைந்த பெண் சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். 

பரசன்கஸ்வௌ பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.