(எம்.எம்.சில்வெஸ்டர்)

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த ‘தேசிய பெட்மின்டன் வல்லவர் போட்டி 2020’ கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்போட்டியானது நாளையை தினம் ஆரம்பமாகவுள்ளது.

விளையாட்டுத்துறை  அமைச்சின் அனுமதியுடன் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ள இப்போட்டியானது, கொழும்பு பெட்மின்டன் சங்க அரங்கு, வர்த்தக சேவை பென்மின்டன் சங்க பென்மின்டன் அரங்கு மற்றும் கொழும்பு ஒட்டஸ் விளையாட்டுக்கழக பென்மின்டன் அரங்கு ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.

இப்போட்டித் தொடரில் 800 வீர, வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளதுடன், ஆண்கள் பிரிவில் நடப்பு பென்மின்டன் சம்பியனான நிலூக்க கருணாரட்ன மற்றும் பெண்கள் பிரிவில் நடப்பு பென்மின்டன் சம்பியனான தில்மி டயஸ் உள்ளிட்ட நாட்டின் முன்னனி வீர, வீராங்கனைகள் பலரும் போட்டியிடவுள்ளனர்.

இப்போட்டித் தொடரில் ஆண், பெண் இரு பாலாரிலும் தனிநபர் திறந்த போட்டி மற்றும் இரட்டையர் போட்டிகளுடன், 15 வயதின்  கீழ், 17 வயதின் கீழ், 19 வயதின் கீழ் பிரிவுகளில் ஆண், பெண் இரு பாலாரிலும் தனிநபர் மற்றும் இரட்டையர் போட்டிகளும் நடத்தப்பட்டவுள்ளது.

இவற்றைத் தவிரவும் 35 வயதின் கீழ் தனிநபர், 40 வயதின் கீழ் தனிநபர், 45 வயதின் கீழ் தனிநபர் மற்றும் 50 வயதின் கீழ் பிரிவுகளில் ஆண், பெண் இரு பாலாருக்குமான தனிநபர்  போட்டிகளும், 55 வயதின் கீழ் ஆண்களுக்கான தனிநபர் போட்டி, 60 வயதின் கீழ் தனிநபர் மற்றும் இரட்டையர் போட்டிகளும், 65 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்கும்  இரட்டையர் போட்டியும் நடத்தப்படவுள்ளன.