- அனுஷா

உலக மக்கள் தொகையில் ஐந்து சதவீதத்தினருக்கு ஹீமோகுளோபின் கோளாறு எனப்படும் இரத்தம் தொடர்பான பாதிப்பு இருக்கிறது. இதில் மில்லியன் கணக்கிலானவர்கள் Sickle Cell Anemia எனப்படும் அரிவாள் வகை இரத்தசோகை பாதிப்பிற்குள்ளாகியிருக்கிறார்கள்.

இவர்களுக்கு மருந்தினாலான சிகிச்சையும், சத்திர சிகிச்சையும் முழுமையான நிவாரணமளித்து வந்தாலும் இவர்கள் குறிப்பிட்ட வகை சத்துள்ள உணவு முறையை தொடர்ச்சியாக பின்பற்றி வந்தால் இதிலிருந்து குணமடையலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். 

சிக்கில் செல் அனிமீயா என்பது இரத்த சிவப்பணுக்களின் மரபணு நோயாகும். பொதுவாக இரத்த சிவப்பணுக்கள் வட்ட வடிவில் தட்டையாக, சிறிய இரத்தக்குழாய்களில் எளிதில் பயணிக்கும் வகையில் நெகிழ்வான தன்மையுடன் இருக்கும்.

ஆனால் இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் சிவப்பணுக்கள் அசாதாரணமான வடிவில் இருப்பதுடன், பிசுபிசுப்பு தன்மையுடன் இருக்கும். இதன் காரணமாக இரத்தகுழாய்களின் உட்புறக்சுவர்களில் ஒட்டிக்கொண்டு, உடலின் ஏனையப் பகுதிகளுக்கு செல்லும் குருதியோட்டத்தில் அடைப்பை உண்டாக்கும். இதன் விளைவாக வலி மற்றும் திசு சேதமடைதலை ஏற்படுத்தும்.

இத்தகைய பாதிப்பு குழந்தை பிறந்து நான்கு மாதங்களுக்குள்ளேயே தெரிந்துவிடும். இதன் தன்மையைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடும்.

அதிகளவு சோர்வு, அதிகளவிலான எரிச்சலுணர்வு, சிறுநீரக பிரச்சினை, மஞ்சள் காமாலை பாதிப்பு, கை கால்களில் வீக்கம் மற்றும் வலி, அடிக்கடி நோய் தொற்று, திடீரென்று மார்பு, முதுகு போன்ற பகுதிகளில் வலி என இதற்கு பல அறிகுறிகள் உள்ளன.

இத்தகைய பாதிப்பிற்கு இரத்த பரிமாற்று  சத்திர சிகிச்சை மற்றும் ஸ்டெம் செல் மாற்று சத்திர சிகிச்சை என இரண்டு சிகிச்சைகள் பலனளித்து வருகிறது.

இருப்பினும் உணவு முறைகளின் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம். குறிப்பாக ஃபோலிக் அமில சத்துள்ள உணவுப் பொருட்களை நாளாந்த உணவு முறையில் இணைத்துக் கொள்ளவேண்டும்.

அத்துடன் ஆரோக்கியமான புரதச்சத்து மிகுந்த உணவுகளையும் ஊட்டச்சத்து நிபுணரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக் கொள்ளவேண்டும். இயல்பான அளவைக் காட்டிலும் சற்று கூடுதலாக நீரை பருக வேண்டியிருக்கும்.

டொக்டர் ஸ்ரீதேவி