(எம்.ஆர்.எம்.வசீம்)

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் தாக்குதலின் பின்னணி தொடர்பாக எதுவும் இல்லை. அதனால் இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்காவிட்டால் தொடர்ந்து இவ்வாறான தாக்குதல்களுக்கு முகம்கொடுக்கவேண்டிய அச்சம் இருக்கின்றது என ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை முடிவடைந்து அறிக்கை வெளிவந்துள்ளபோதும் தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் தொடர்பாக எந்த விடயமும் இல்லாதிருப்பது தொடர்பில் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டிருக்கின்றது. ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமை சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது.இருந்தபோதும் வெளிவந்திருக்கும் அறிக்கையில் தாக்குதலை பின்னின்று செயற்படுத்தியது யார் என்ற கேள்விக்கு பதில் இல்லை. 

மேலும் ஈஸ்டர் தாக்குதலில் சஹ்ரான் குண்டை வெடிக்கச்செய்தார். ஆனால் அவரை அந்த நிலைக்கு ஆளாக்கியது யார் என்பதே கேள்வியாகும். தற்கொலை தாக்குதலை மேற்கொள்ளுமாறு அவருக்கு கட்டளையிட்டவர் யார்?. போன்ற விடயங்களே இறுதி அறிக்கையில் இருக்கவேண்டும். ஆனால் ஆணைக்குழுவின் அறிக்கையில் இந்த விடயங்கள் எதுவும் இல்லை. மாறாக வேறு யாரையோ இதன் குற்றவாளியாக்கும் வகையிலே அறிக்கை அமைந்துள்ளது. 

ஏனெனில் குண்டுதாக்குதலை மேற்கொண்டது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவாே அல்லது ஞானசார தேரராே அல்ல. அத்துடன் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கும்போது அவரை கொலை செய்ய திட்டம் இருப்பதாக நாமல் குமார் வாக்குமூலம் அளித்திருந்தார். அதேபோன்று தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வையும் கொலை செய்யும் சதித்திட்டம் இருப்பதாக அன்று நாமல் குமார தெரிவித்திருந்தார்.

அப்படியானால் இருந்த ஜனாதிபதி மற்றும் தற்போதைய ஜனாதிபதி ஆகிய இருவரையும் கொலை செய்து, ஜனாதிபதியாவதற்கு யாருக்கு தேவையாக இருந்தது. வேறு யாரையாவது ஜனாதிபதியாக்க தேவையாக இருந்தது யாருக்கு?. சஹ்ரான் அல்ல. சஹ்ரானை இயற்றிய அந்த சக்தி யார். எந்த நாடு என்ற விடயங்கள் தொடர்பாக நாங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். இல்லாவிட்டால் எமது நாட்டில் மீண்டும் இவ்வாறான குண்டு வெடிப்புகளுக்கு முகம்கொடுக்கவேண்டிவரும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது என்றார்.