(செ.தேன்மொழி)
கொவிட்-19 வைரஸ் பரவலை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ள  தடுப்பூசிகளை முறையாக பயன்படுத்தாவிட்டால், வைரஸ் தொற்று மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மஹரகம தொகுதி அமைப்பாளர் சட்டதரணி சுகத் ஜயசுந்தர தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, கொவிட்-19 வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஐந்து இலட்சம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. அவை தற்போது இராணுவம், பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் என பலருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். ஆனால் எவ்வாறு கிடைக்கப்பெற போகின்றது என்பது தொடர்பில் தெரிவிக்கப்படவில்லை.  

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் எடுத்து வரப்பட்டதைப் போன்று, சீனாவிலிருந்துக் கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர். எனினும் இந்த தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இன்னமும் அனுமதிக்கிடைக்கப் பெறவில்லை.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் தொகையானது தினந்தோரும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.  நாள் ஒன்றுக்கு 3-4 பேர் வரை வைரஸ் தொற்றினால் உயிரிழக்கின்றனர். அதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு போதுமான வசதிகள் செய்துக் கொடுக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தொற்றாளர்கள் குணமடைந்து சென்றதன் பின்னர், சிகிச்சை நிலையங்களில் கடமை புரிந்து வருபவர்கள் ஊடாக வைரஸ் கொத்தணி உருவாகினால் அதனை தடுப்பதற்கான திட்டங்கள் காணப்படுகின்றதா?

கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக கூறினாலும், அவர்கள் வேறு நோய்க்குறிகள் காரணமாகவும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர்கள் என்றுக் கூறி அவர்களை வேறுப்படித்தி வைத்துவிட்டு, மற்றைய நோய்குறிகளுக்கான சிகிச்சைகளை அளிக்காமையின் காரணமாக இவ்வாறு உயிரிழப்புகள் அதிகரிக்கின்றதா? என்றும் எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் மேல்மாகாணத்திற்கு தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக கூறுகின்றனர். மேல்மாகாணத்திற்கான  தடுப்பூசிகளை எவ்வாறு பெற்றுக் கொள்ளப்போகின்றார்கள் என்பதை தெரிவிக்கவில்லை. தடுப்பூசிகள் விடயத்தில் முறையாக செயற்படாவிட்டால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு முடியாது. வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராவிட்டால் , நாட்டின் கல்வி , பொருளாதாரம் என அனைத்து துறைகளும் மேலும் வீழ்ச்சியடையவேண்டிய நிலைமை ஏற்படும் என்றார்.