(இராஜதுரை ஹஷான்)

பயன்தரும் அரசாங்கத்தை அடியோடு வீழ்த்த அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. இவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்பதை கட்சியின் தலைவர்,மற்றும் ஏனைய உறுப்பினர்கள் ஆகியோரின் அபிப்ராயத்துக்கு அமையவே கட்சியின் பொதுச்செயலாளர் என்ற ரீதியில் தெரிவித்தேன் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்ண்டவாறு குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்,

கேள்வி; கூட்டணி என்ற ரீதியில் அமைச்சர் விமல் வீரவன்ச மன்னிப்பு கோரவில்லை என்று குறிப்பிகின்றீர்களா?

பதில்; ஆம் அமைச்சர் விமல் வீரவன்ச செய்தது தவறு அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்பதில் கட்சி உறுதியாக உள்ளது.அதனை விடுத்து ஒழுக்கமில்லாமல் ஊடகங்களில் தேவையற்ற கருத்தை குறிப்பிட்டு எம்மை விமர்சிக்கின்றார். இவ்வாறான செயற்பாடு கவலைக்குரியது. இனடிப்படையில் தொடர்ந்து பயனிக்க முடியாது.

கேள்வி; இவ்விடயம் குறித்து பொதுஜன பெரமுன தலைவரின் நிலைப்பாடு என்ன?

பதில்; பொதுஜன பெரமுனவின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளார். இதில் எவ்வித மாற்றமும் கிடையாது. கட்சி பொது செயலாளர் என்ற ரீதியில் விமல் வீரவன்ச தொடர்பில் குறிப்பிட்ட கருத்தை கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நிராகரிக்கவில்லை. கட்சியின் பொதுச்செயலாளர் என்ற ரீதியில் பொறுப்புடன் செயற்பட்டுள்ளேன். கட்சி தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்காகவே விமல் வீரவன்ச மன்னிப்பு கோர வேண்டும்  என்ற விடயத்தை குறிப்பிட்டேன்.

கேள்வி; பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும்,அமைச்சர் விமல் வீரவன்சவும் இணக்கமாகவே செயற்படுகிறார்கள்.

பதில்; அமைச்சரவை அமைச்சராக விமல் வீரவன்ச உள்ளார். பிரதமர் பொது நிகழ்வுகளில் அவருடன் இணக்கமாக செயற்வதுவதற்கும், தற்போது நாம் குறிப்பிடும் கருத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. விமல் வீரவன்ச கூட்டணியின் ஒரு உறுப்பினர் என்ற ரீதியில் கூட்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதையே அழுத்தமாக குறிப்பிடுகிறோம்.

கேள்வி; அமைச்சர் விமல் வீரவன்ச சமூக ஊடகங்களில் இவ்விடயம் குறித்து மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்?

பதில்; சமூக வலைத்தளங்களில் மன்னிப்பு கோருவதால் எதுவும் மாற்றமடைய போவதில்லை தவறை சுட்டிக்காட்டும் தற்துணிவு கட்சி என்ற ரீதியில் எமக்கு உண்டு.

கேள்வி; கூட்டணியில் ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவே பலர் குறிப்பிடுகிறார்கள்?

பதில்; கூட்டணியின் ஊடாக பல வெற்றிகளை அடைந்துள்ளோம்.ஒரு தரப்பினருக்கு கிடைக்க வேண்டிய உரிமையினை தட்டிப்பறிக்கும் இழி நிலைக்கு பொதுஜன பெரமுன செல்லவில்லை. பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியமைத்த அனைத்து கட்சிகளுக்கும் உரிய நிலை பொதுவாக வழங்கப்பட்டுள்ளது.பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ சிறையில் இருந்துக் கொண்டு  கட்சியை பலப்படுத்தியுள்ளார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

கேள்வி; மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர தான் முன்னின்று செயற்பட்டதாக அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிடுகின்றமை உண்மையா?

பதில்; அதனை பொதுஜன பெரமுனவின் தலைவர்கள்  குறிப்பிட வேண்டும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சி மாற்றத்தின் உரிமையாளர் தான் மாத்திரம் என்று அவர் குறிப்பிட்டுக் கொள்வது நகைச்சுவையானது.

கேள்வி; பொதுஜன பெரமுன மற்றும் பிரதமர் விமல் வீரவன்சவை கைவிட்டால் அவரது அரசியல் பயணம் எவ்வாறானதாக அமையும்?

பதில்; மழை பெய்தால் குளம் நிரம்பும் என்பதுடன் தொடர்புடையதாக இக்கேள்வி காணப்படுகிறது. ஆகவே இதற்கு பதிலளிக்க தேவையில்லை.'ஒரு விவசாயின் வீட்டு முற்றத்தில் அதிகளவில் விளைச்சலை தரும் முருங்கை மரம் ஒன்று இருந்ததாம். ஒருமுறை மரத்தில் காய்கள் அதிகம் காய்த்திருந்ததாம். இம்முறை அதிக காய் காய்த்துள்ளது காய்களை விற்று வியாபாரத்தை முன்னேற்றலாம் என அவர் நினைதது.லொறி ஒன்றையும் வாங்கினாராம்.

வாங்கிய லொறியை வீட்டு வாசலுக்கு கொண்டு வர முடியவில்லை. முருங்கை மரம் இடையில் உள்ளதால்.உடனே அவர் எழுந்து சென்று முருங்கை மரத்தை அடியோடு வெட்டி வீழ்த்தினாராம். இந்த கதையை நினைவுப்படுத்த விரும்புகிறேன். எம்மிடம் அதிக காய் காய்க்கும் முருங்கை மரம் உள்ளது அதனை வெட்டி வீழ்த்த அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். இதுவே எமது உறுதியான ,இறுதி நிலைப்பாடு.

கேள்வி; கூட்டணிக்குள் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா?

பதில்; அப்படி குறிப்பிட முடியாது. இச்சம்பவம் குறித்து அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுத்துள்ளேன். கட்சி தலைவர் கூட்டம் என்று குறிப்பிட்டே தம்மை விமல் வீரவன்ச அழைத்ததாக குறிப்பிட்டுள்ளார்கள். இரண்டாவது கூட்டத்தில் பெரும்பாலான கட்சிகள் கலந்துக் கொள்ளவில்லை. முதலாவது கூட்டத்தில் 10 கட்சிகள் இருந்ததாக குறிப்பிட்டார் அது பொய். இரண்டாவது கூட்டத்தில் 12 கட்சிகள் கலந்துக் கொள்ளவில்லை. 5 கட்சிகள் மாத்திரம் கலந்துக் கொண்டுள்ளது என்றார்.